பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

93


கொள்ளவேண்டும். தொழிலாளர் நலனே, நாட்டின் நலன். நாட்டின் நலனே, தொழிலாளர் நலன், இந்தச் சிந்தனை நமக்கும் நமது நாட்டுத் தொழிலாளர்களுக்கும் வந்தாக வேண்டும்; இதுவே நமது கொள்கை; கோட்பாடு!

இன்று பெரும்பாலும் தொழிலாளிக்கு உத்தரவாதம் பாதுகாப்பு நலன்கள் உறுதிப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர்கள் பொறுப்பும் கடமை உணர்வும் உடையவர்களாக வளரவேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறல்ல. அண்மைக் காலமாகப் பணியின் தரம் குறைந்து வருகிறது. எண்ணற்ற பணிகள், செய்யவேண்டியவர்கள் இருந்தும் செய்யப்படுவதில்லை. செய்யும் வேலையின் தரத்திற்கும் பயனுக்கும் உத்தரவாதம் இல்லையானால் காலப்போக்கில் மூலதனம் அழியும்; நாடு, வளம் குன்றும். இன்று, இந்தியாவின் நிலை இதுவே! ஏன்? சோவியத்தில் ஏற்பட்ட நொடிவுகளுக்குக் கூட இதுவே காரணம். தொழிற்சாலை, உற்பத்தி இலக்கை அடையத் தக்கவாறு உழைப்பதில்லை. உற்பத்தி செய்யும் பொருள்களின் தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏன்? தொழிற்சாலையையே இழந்து விடுவோமோ என்ற அளவுக்குத் தொழிற்சாலைகள் பழுதுற்று விட்டன. தொழிற்சாலைகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இவைகளைப்பற்றித் தொழிலாளர்கள் கவலைப்படுவதில்லை. அப்படியே கவலைப்படுபவர்கள் இருந்தாலும் மிகச் சிலர்தான் கவலைப்படுகின்றனர். மிகச் சிலர் உதாரணத்திற்குத்தான் பயன்படலாம். நாட்டின் பணிகள் இடையீடின்றி, தரத்தில் தாழ்வு இம்மியும் குறைவுபடாமல் நடக்கவேண்டும். செய்யும் தொழிலைத் தெய்வமாகப் போற்றவேண்டும். தொழிற்சாலையைக் கோயிலாக எண்ணவேண்டும்.

அன்பு நிறைந்த தொழிலாளர்களே! மே தின வாழ்த்துக்கள்! ஒன்றுபடுவோம்! கூடி உழைப்போம் கூடி வாழ்வோம்! தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்போம்!