பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுற்றுலாச் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கல்வித் திட்டத்தில் சுற்றுலா கட்டாயமாக்கப்படவேண்டும்.

மனித உலகத்தை விரிவான - பரந்த பண்பாட்டில் நிலை பெறும்படி செய்வது பன்னாட்டுத் தொடர்பேயாம். பன்னாட்டுத் தொடர்பு அறிவை விரிவாக்குவது; மனித நேயத்தை வளர்த்து இதயப் பாங்குகளைச் செழுமைப் படுத்துவது, ஆதலால் நமது வாழ்க்கையில் துறைதோறும் பன்னாட்டுத் தொடர்பைக் கொண்டு புதுமை பெறுவோமாக! நாட்டுக்கும் நாட்டுக்குமிடையேயுள்ள எல்லைகளைத் தகர்த்து விசாலப் பார்வையுடன் மானிட சமுத்திரத்தில் சங்கமமாவோம்! “ஒரே உலகம்! ஒரே இனம்!” என்ற இலட்சிய உணர்வைப் பெறுவோம்!

இன்று அறிவியல், இருபக்கக் கூர்முனைக் கத்தியாக வளர்ந்துவருகிறது. அதாவது ஒரு பக்கம் வாழ்விற்கு ஆக்கம். மறுபக்கம் கொடிய போர்க்கருவிகள் மூலம் அழிவு. அழிவிலிருந்து இந்த உலகத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இக் கடமையை நிறைவேற்றப் பன்னாட்டுத் தொடர்பு துணை செய்யும். மானுடத்தின் அறிவும், ஆற்றலும் இந்த உலகத்திற்குப் பொது. இந்த உலகத்தின் வைப்புகள் பொதுவேயாம். மாந்தர்க்கு உலகப் பார்வை ஏற்பட்டுப் பன்னாட்டுத் தொடர்பு கிடைத்தால்தான் எல்லை கடந்த நிலையில் அறிவுக்கு மதிப்பு ஏற்படும். உழைப்புக்கு உயர்வு கிடைக்கும். அதனாலன்றோ மாமுனிவர் காரல் மார்க்சு “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்” என்றார்.

நமது நாட்டு இளைஞர்களும் உலக மாந்தராக உயர்ந்து விளங்க முயற்சி செய்யவேண்டும். பல மொழிகளைக் கற்கும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். கடவுள் ஒருவரே! அவர் பெயரால் ஒன்றாக வேண்டும்.

”ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்” என்ற பாரதி வாக்கு வெற்றி பெற மாணவர் உலகம் உழைக்க வேண்டும்.