பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

145


இவ்வாறு இணைத்த பெருமைக்குரியன. இத்தகு பாரம்பரியம் மிகவும் மிக்க-புகழ் மிக்க அடிச்சுவட்டில் இந்த நாட்டைத் தொடர்ந்து வழி நடத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.

மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு மதம் தடையாக இருத்தல் முடியாது; இருத்தல் கூடாது. மதம்-சமயம் ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கடந்த நிலையில் ஒரு அறிவாற்றலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்ளும்-பண்படுத்திக்கொள்ளும் ஓர் அனுபவம் மிக்குடைய அனுபூதி வாழ்க்கையேயாம். இந்த உயர்ந்த வாழ்க்கையில் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை; இருக்கவும் இயலாது. சமயம், உயிர்ப்புள்ள ஒரு வாழ்க்கை முறை. அன்பிலும், தவத்திலும், தொண்டுகளிலும் செயற் பட்டு மனித குலத்தை வளர்த்து வாழ்விப்பதே சமயம். வரலாற்றுப் போக்கில் ஆதிக்க உணர்வுகள் மேலிட மேலிட உண்மையான ஆன்ம அனுபவத்திற்குத் துணையாய் நின்ற சமயம் புரோகிதச் சமயமாக மாறி, பின்நெகிழ்ந்து கொடுக்க இயலாத நிறுவனமாக மாறி, மானுடத்திற்கு நன்மை செய்வதற்குப் பதிலாகத் தீமை செய்யலாயிற்று. இந்தக் கால கட்டத்தில்தான் சமுதாய ஒருமை நிலையையும் சமூக நீதியையும் காக்கும் கடப்பாட்டுணர்வில் சமயநெறிக்கு எதிராகச் சிலர் சிந்திக்கத் தொடங்கினர். ஆயினும் இதுவும் நெடிய பயனைத்தரத் தக்க அணுகுமுறையல்ல என்பதை இன்றைய வரலாறு உணர்த்துகிறது. சமயம் சாராத வாழ்க்கை முழுமையுறாது என்பதே உண்மை.

சமய நெறிகள் அனைத்தும் மானிட வாழ்வை மேம்படுத்தவே. நாம் அனைத்துச் சமயங்களிலும் பொது நோக்கு உடையவர்கள்; எந்த ஒரு சமயத்தையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதை அறிவுறுத்தவே (Secular State) என்று அறிவித்துள்ளோம். நமது நாட்டு இளைஞர்கள் இந்திய நாட்டின் அனைத்துச் சமய நெறிகளையும் அறிந்து பொதுநெறி பற்றி