பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


லேயே மனிதனுக்கிருக்கிறது. இந்த உணர்ச்சியைத் தன்னலத்திற்காக-தன் உற்றார் உறவினர்களோடும் போரிடும் வகையில் வளராமல் தடுத்துத் தீமையை எதிர்த்துப் போராடும் போருணர்ச்சியாக வளர்க்கலாம்-வளர்க்க வேண்டும். உழவர்கள் நிலத்தின் இயல்பைத் தெரிந்து கொண்டாலே சிறந்த விவசாயிகளாகிறார்கள். அதுபோல ஆசிரியர்கள் குழந்தைகளின் மன இயல்பைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே நல்லாசிரியர்களாகத் திகழ முடியும். நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு உரமிடப்படுதல் போல குழந்தைகளின் மன இயல்புக்கு ஏற்றவாறு நல்ல கருத்துணவுகள் வழங்கப் பெறுதல் வேண்டும். உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள் கிடைக்காத போது, உடல் நோய்வாய்ப்படுவது போலவே, மனநலத்திற்கேற்ற கருத்துணவுகள் கிடைக்காதபோது ஒழுக்க உணர்வுகளும் ஒழுங்குணர்வுகளும் தளரத்தான் செய்யும். அதனைப் பருவமறிந்து தேவையறிந்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும், ஆசிரியரால் வழங்கப்பெற்ற கருத்துணவு செரித்துச் செயல்படுதற்குப் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும். மனித குலத்திற்குள் அன்பு வழிப்பட்ட இணைப்பும் அமைதி தழுவிய நல்வாழ்க்கையும் வளர-ஒழுங்கு வளர ஆசிரியர்களும் பெற்றோர்களும் முயற்சித்து வெற்றியடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.


31. [1]சமூக நோக்கில் அறிவியல்

னிதர் பலர் கூடிக் கலந்து, வாழ்வதற்குச் சமூகம் என்று பெயர். சமூக அமைப்புத் தோன்ற, சமூக அமைப்பு வளர, சமூக அமைப்பு நிலைப்பட்டு நிற்க அறிவியல் அடிப்படையாக அமைகிறது; கருவியாக அமைகிறது. சமூக அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின.


  1. சிந்தனை மலர்கள்