பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

179


ருப்பது போல மருது சகோதரர்கள் வாழ்க்கையில் யாருக்குச் சிறப்பிடம் என்று கண்டுபிடிக்க முடியாத வண்ணம் சிந்தனையிலும் செயலிலும் ஒருமை உணர்வுடைய இணையற்ற சகோதரர்களாக வாழ்ந்தார்கள்.

போர்க் களத்தில் வெற்றியன்றி வேறு காணாத இந்த வீர சகோதரர்கள் கடவுள் சந்நிதிகளில் அன்பினால் குழைந்து பக்தி செய்தமையை வரலாறு காட்டுகிறது. இந்த வீர சகோதரர்களின் கரங்கள்; கடவுளைத் தவிர வேறு யாருக்கும் கும்பிடு போட்டதில்லை. அவர்களுடைய கரங்கள் வழங்கிப் பழக்கப்பட்டனவே தவிர வாங்கிப் பழக்கப் பட்டவை அல்ல.

இவர்கள் வீரர்கள் ஆதலால் வீரவேல் கொண்டு சூரனைச் சாடிய குன்றக்குடி ஆறுமுகக் கடவுள்மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர். இன்றைய மலைக்கோயிலை எடுப்பித்துக் கட்டியவர்களே மருதுபாண்டியர்கள்தாம். குன்றக்குடிக்கு முருகனை வழிபட அடிக்கடி வருவார்கள். இருவரில் சின்ன மருது பலகாலும் வருவதுண்டு. குன்றக்குடி எல்லையிலேயே குதிரையிலிருந்து இறங்கி மலையை வலம் வந்து, கீழவீதியிலிருந்த அரண்மனைக்குச் சென்று, நீராடித் திருநீறணிந்து சின்னமருது மலையேறி வழிபட்ட காட்சியை என்னென்று கூறுவது! கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்புடன் திகழும் திருமுருகனுக்கு, செம்பொன்னால் அங்கி செய்து சாத்தினான். அந்த அங்கியில் திருமுருகனின் வலக்கால் அணியின் அடிப்புறத்தில் “அடிமை சின்னமருது செய்த உபயம்” என்று அவன் எழுதி வைத்திருப்பது பேரரசன் இராசராச சோழன் "சிவபாத சேகரன்' என்று பெயர் கொண்டது போல் “ஆறுமுகன் அடியினை சேகரன்” என்று சின்ன மருதுவை வாழ்த்த வேண்டும் போல் இருக்கிறது. கோயிலைச் சார்ந்து மருதாபுரி என்னும் ஓர் அழகிய தெப்பக் குளத்தையெடுத்து, அதன் கரையில் தென்னஞ் சோலையை அமைத்தான் சின்ன மருது.