பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



34. [1]நன்றிக்குரியவர்கள்

மிழினம் வளர்ந்த ஓரினம். சிந்தனை வளத்தாலும் சிறந்த இலக்கியத்தாலும் புகழ்படைத்த இனம். சிந்தனையின் உச்சவரம்பாகிய சமயநெறியில் நின்று வாழ்ந்த - வாழ்ந்து கொண்டிருக்கின்றன இனம். சிந்தனைக்கும், சொல்லுக்கும் அப்பாற்பட்ட - ஆனாலும் ஒன்றாகி உடனாகி நின்று ஆரா இன்பத்தை வழங்குகின்ற திருவருள் நினைவு அவர்களின் தலையாய ஒழுக்கநெறி. இந்த நினைவு தமிழினத்தின் அறிவின் தெளிவுக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. ஆற்றலைப் பெருக்கிற்று. இவற்றின் பயனாக, நாடு முழுவதும், சிற்றுார்களிலும் பேரூர்களிலும் திருக்கோயில்கள் எழுந்தன. விண்ணை அளந்து காட்டி வினைமறைக்கும் கோயில்கள் ஆயிரமாயிரம் எழுந்தன.

மனிதனின் வாழ்க்கை நிலமட்டத்தோடு கூனிக் குறுகிக் கிடப்பதன்று. ஓங்கி உயர்ந்து வளரவேண்டும் என்பதே தமிழினத்தின் விழுமிய நோக்கம். ஓங்கி உயர்ந்து வளர்ந்தால் மட்டும் போதுமா? அதிலே பொலிவு இருக்க வேண்டும். அது உலகம் தழுவியதாக இருக்கவேண்டும். அதனாலன்றோ, கண்கவர் ஓவியங்களும், கவினார்ந்த சிற்பங்களும், கருத்தீர்க்கும் சிந்தனைப் படைப்புக்களும் திருக்கோயில் கோபுரங்களை அணி செய்கின்றன. உச்சியில் கலசம். புகழ்மிக்க வாழ்க்கை. மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டுகின்ற சின்னம். தமிழகத்தை ஆண்ட பேரரசுகளின் அரண்மனைகளைக் காணோம். கோட்டை கொத்தளங்களைக் காணோம். காணாமைக்குக் காரணம், வரலாறு பொய்யல்ல. தனி மனிதனின் வாழ்க்கை இலக்கியமாகவும், மக்கட் சமுதாயத்தின் விழுமிய பொது இடமாகவும் உலகியல் நிலையிலும், உயிரியல் நிலையிலும் தூக்கி நிறுத்தும்


  1. பொங்கல் பரிசு