பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தச் சூழ் நிலையில் பெரியார் அவர்களுக்கு நம்முடைய விண்ணப்பம் ஒன்று உண்டு. அதாவது பண்பட்ட சமயம் ஒன்று நாட்டிற்குத் தேவை. சன்மார்க்க சமய நெறி நாட்டிற்குத் தேவை. இந்தப் புனிதமான திருப்பணிக்குப் பயன்படுகின்ற திருக்கோயில்களும் தமிழகத்திற்குத் தேவை. இவைகளின் மூலமே அல்லன நீக்கி, நல்லன காண வேண்டும். இவ்விண்ணப்பத்தைப் பெரியார் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்னவோ நமக்குத் தெரியசாது. ஆனால் அதனைச் சொல்ல வேண்டியது நம்முடைய பொறுப்பும் கடமையுமாகும்.

பெரியார் அவர்கள் சமயத் துறையில் செய்த கிளர்ச்சிகளின் பயனாக ஒரு விழிப்புணர்ச்சி நாட்டில் வந்திருக்கிறது. சமயத்துறையினர்கூட சமுதாய சேவையில் அக்கறை காட்டத் தலைப்பட்டுள்ளனர். இத்துறையில் பெரியார் அவர்கள் செய்த மகத்தான பணிகளுக்கு நம்முடைய நன்றி.

இன்றையப் பெரியார் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எல்லோரும் நாமும் கலந்து கொள்ளுகிறோம். எத்தனையோ துறைகளில் பெரியார் அவர்களுக்கும் நமக்கும் கருத்து ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இருப்பினும் அவர்கள் சமுதாய மறுமலர்ச்சித் திருப்பணியில் ஈடுபட்டுச் செய்த ஒப்பற்ற திருப்பணிகளை நாம் மறந்துவிட முடியவில்லை. இப்படிச் செய்வதினால் சிலர் நம்மீதும் கூட வெறுப்புக் கொள்ளலாம். அப்படி வெறுப்பைக் காட்டுபவர்கள் பிரித்து வைப்பதின் மூலம் தன்னலத்தை வளர்த்துக் கொள்பவர்களே ஆவார்கள். வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை காணும் விழுமிய பண்பு நாட்டில் வளர வேண்டும். ஆகவே சாதி ஒழிப்பு இயக்கத் தலைவராக, சமுதாய புனர்நிர்மாண இயக்கத் தந்தையாக விளங்கும் பெரியார் அவர்கள் நீடுழி வாழ்க என வாழ்த்துகின்றோம்.