பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

193


கல்வி உரிமை இழந்தான். கலைமகள் வழிபாட்டிற்குப் பதில் ஆயுதபூசை செய்பவனானான்-உழைத்தும் ஏழையானான்.

தமிழினத்தின் நாகரிகக் கூறுகளில் இயல்பாகத் தோன்றி வளர்ந்தது கடவுள் நெறி, மற்ற இனத்திற்குக் கடவுள் நெறியைக் கற்றுக் கொடுத்தவனும் தமிழனே. ஆயினும், கீழ்சாதி என்ற நிலைமை ஏற்பட்ட பிறகு அவன் கட்டிய கோயில்களில் வழிபாடு செய்யும் உரிமையை இழந்தான். இந்த இழிநிலையை வழிவழியாகத் தமிழ்ச் சான்றோர்கள் எதிர்த்து வந்திருக்கிறார்கள். திருவள்ளுவர், நக்கீரர், திருநாவுக்கரசர், சேக்கிழார், இராமலிங்க அடிகள், பாரதி ஆகிய தமிழ்ச் சான்றோர்கள் இந்த அநீதியை எதிர்த்து தமிழினத்தின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். எனினும் தமிழினம் அவர்களுடைய போராட்டத்தின் சக்திகளுக்கேற்றவாறு நியாயமாக முன்னேறிவிடவில்லை. காரணம், இன உணர்வு என்பது தமிழினத்தில் அடிப்படையிலேயே கெட்டு விட்டதுபோலத் தோன்றுகிறது. அவர்களிடத்தில் இன வழிப்பட்ட கவர்ச்சி, பாசம், பரிவுகள் இல்லை. இன உணர்வுக்கு மாறான உணர்வே மேலோங்கி நிற்கின்றது. அதன் காரணமாகத் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் இன்று தமக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமக்குள் பல்குழு அமைத்து உட்பகை வளர்க்கிறார்கள். கொல் குறும்பும் செய்கிறார்கள். இவ்வாறு கெட்டு அழிந்துபோன தமிழினத்திற்கு இருபதாம் நூற்றாண்டில் வாழையடி வாழையெனப் பாதுகாப்பளிக்கத் தோன்றியவர் தலைவர் தந்தை பெரியார் தந்தை பெரியார் சுயசிந்தனையாளர்-தமிழினத்தின் நல்வாழ்க்கையையே தம் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர். அதுவே அவருக்குக் கொள்கை, சமயம் எல்லாம்.

தலைவர் பெரியார் அவர்கள் சென்ற நூற்றாண்டுகளில் இன நலனுக்குப் போராடியவர்கள் அடைந்த