பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வியந்தும்-சிறியோரை இகழ்ந்தும் அறியா இயல்பினர். காஞ்சியில் தோன்றி காசினி முழுதும் புகழ் விளங்க நின்ற செம்மல் நமது அண்ணா. நமது உயிர்மூச்சு, இதயத்தின் எழில்நாதம்-நெஞ்சகத்தின் ஒளிவிளக்கு அணைந்துவிட்டது. தமிழன்னையின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது. அன்னை பாரதம் அவலம் பிடித்து நிற்கிறது. அண்ணாவின் அரவணைப்பில் வளர்ந்த ஆயிரம் ஆயிரம் தம்பிகள் அழுது அரற்றுகின்றனர். நிலவை இழந்த விண்ணகமெனத் தமிழகம் விளங்குகிறது. அவர் தம் நினைவு நீங்காத நினைவு.

நேற்றுவரையில் நம்முடன் வாழ்ந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரது பிரிவு பொதுவாக இந்தியநாட்டுக்கும் - சிறப்பாக தமிழ் நாட்டிற்கும் ஈடு செய்யமுடியா இழப்பாகும். அறிஞர் அண்ணாதுரை தலைவராகப் பிறந்தவரல்லர். வாழ்நாள் முழுவதும் அடி அடியாகப் போராடியே முன்னுக்கு வந்தவர். அவர் ஆள்வினையின் சின்னமாகத் திகழ்ந்தார். தெள்ளு தமிழ் நெஞ்சத்தினராக-இனிய சொற்கள் பயிலும் ஏந்தலாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். கொடிய புறக்காற்று வீசும் அரசியலில் வாழ்ந்தாலும் கோபம் என்பது இன்னதென்றறியாமலே வாழ்ந்தார். அவருக்கு மன வருத்தங்கள் வருவதுண்டு. பேசாமல் மெளனம் சாதிப்பதே அவரின் அருமைத் தம்பிகளுக்கு அவர் இட்ட தண்டனை.

தமிழ் இலக்கியத் துறையில் இவர் ஒரு காலகட்டமாகத் திகழ்ந்தார். வாழ்க்கைக்கு ஒவ்வாப் பழமைகளைச் சித்தரித்து விலக்குவதிலும், புதுமைச் சிந்தனைகளைச் சேர்ப்பதிலும் அவர் படைத்த கதைகள் கவனத்திற்குரியன. பார்வதி பீ.ஏ. ஓர் அரிய படைப்பு. எழுத்தாளராக மட்டுமன்றி இனிய நாவலராகவும் திகழ்ந்தார் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கோளாரும் வேட்ப மொழியும் சொல் இந்த நூற்றாண்டில் இவருடைய தனியுரிமையாக இருந்தது. அடுக்கிய மொழித் தொடர், உரிய பொருள் விளக்கும் உவமை நலன்,