பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனை ஊற்று வற்றாது. நம்முடைய வாழ்வுக்கு வளம்பல தரவேண்டுமானால் தாய் மொழியே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில மொழியின் மூலம் அறிவியல், தாவர இயல், பொருளியல் படித்த ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ளனர். அவர்களில் பலர் அத்தகைய ஆசிரியத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பலருக்கு அவர்கள் பயின்ற துறையில் சுவையில்லை. அன்றாட வாழ்க்கையில் அந்தக் கண்ணோட்டம் அமையவில்லை. அத்துறையில் அவர்கள் மேலும் ஆராயவுமில்லை. காரணம் அவர்கள் பயிற்சி, சிந்தனை வழிப்பட்டதல்ல. ஏதோ படித்தார்கள்; தேர்வுக்கும் தொழிலுக்கும் பயன்பட்டது. அப்பயிற்சியைச் சிந்தனை மொழியாகிய தாய்மொழியில் பெற்றிருப்பார்களானால் தொடர்ந்து சிந்தித்திருப்பார்கள்; ஆராய்வார்கள். அதனால் அவர்களுக்கும் பயனுண்டு. அவர்களை ஈன்றெடுத்த நாட்டிற்கும் பயனுண்டு, கவிஞன், பாரதி, "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், இளங்ககோவைப் போல் பூமிதனிலே யாங்கணுமே பிறந்ததில்லை" என்று பாடுகின்றார். இக்கவிஞர்கள் கவிஞர்கள் ஆனவர்களுமல்ல; ஆக்கப்பட்டவர்களுமல்ல கவிஞர்களாகவே பிறந்தார்கள். அங்ஙனம் பிறப்பதற்குரிய சூழ்நிலை. தமிழகத்தில் இருந்தது. அது போலவே நாம் விஞ்ஞானிகளை ஆக்க விரும்பவில்லை. விஞ்ஞானிகள் பிறக்க விரும்புகின்றோம். அதற்குரிய சூழ்நிலையைத் தமிழகத்தில் உண்டாக்க வேண்டுமானால் பயிற்சி மொழியைத் தாய்மொழி ஆக்க வேண்டும்.

உலகம் விஞ்ஞானத் துறையில் விந்தை மிகுசாதனைகளைச் செய்து வருகின்றது. பழங்காலக் கனவுகளாக, அற்புதங்களாகக் கருதப் பட்டவைகள், இன்று நடைமுறைக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். நம்முடைய அன்னை மொழியாம் தமிழ்மொழி இருந்தபடியே இருப்பதை எண்ணினால்