பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரியங்களுக்காகப் பயன்படுத்துவதற்குத் துணை இணை மொழியாக ஆங்கிலம் இருக்கும்.

மக்கள் எத்துணைக் காலம் விரும்புகிறார்களோ அத்துணைக் காலம்வரை ஆங்கிலம் மாற்றுமொழியாக இருக்கும், ஆங்கிலத்தின் கால எல்லை பற்றி முடிவு எடுப்பதை இந்தி பேசும் மக்களுக்கு நான் விடமாட்டேன் இந்தி பேசாத மக்களே அந்த இறுதி முடிவை மேற்கொள்வார்கள்."

இந்த வாக்குறுதியை வழங்கி பாரதநாடு சிதறுண்டு போகாமல் காப்பாற்றினார். இந்த உறுதி மொழியைப் பெற்றுத் தந்தது அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் வலிவும் வனப்பும்தான் என்பதை நடுநிலை நெஞ்சினர் உணர்வர். ஆனால் பண்டித நேரு அளித்தது ஒரு வாக்குறுதியேயாம்.

அது அரசியல் சட்டத்தில் விதியாக ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை. அமரர் பண்டித நேரு அவர்கள் அளித்த உறுதி நடுவணரசால் காப்பாற்றப் பெறவில்லை. நேருவின் உறுதி மொழியை மீறி ஆட்சிமொழி ஆணைக்குழு பரிந்துரை செய்த ஒரு தலைப்பட்சமான பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் அறிவித்தார். அவர் அறிவிப்பின் சாரம்:

“இந்தி ஆட்சி மொழியாக வந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளைத் துவக்க வேண்டும்” என்பதேயாகும்.

மீண்டும் 1960 – இல் பேரறிஞர் அண்ணா அவர்களைத் தலைமையாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்ததால் அமரர் பண்டித நேருவும், குடியரசுத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரும் "ஆங்கிலம் இணையாட்சி மொழியாக நீடிக்கும்” என்று அறிவித்தனர்.