பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். இது வரலாற்றுப் போக்கில் இந்தியாவின் தேவையாகும்; கட்டாயமாகும்.

இந்திய ஒருமைப்பாடு என்பது எளிதில் வளரக் கூடியதன்று. பொதுவாக மக்களிடத்தில் இயல்பாக ஒருமைப் பாட்டுப் பழக்கம் காலூன்றுவதில்லை. அவரவர் தம் சார்புகளின் வழியிலேயே சிந்தித்தல், செயல்படுதல் என்பதே இயல்பானது. அதுவே நடைமுறையாக இருக்கிறது. சார்புகளைக் கடந்து நடுவு நிலையில் எண்ணுதல், செயற்படுதல் என்னும் வாழ்க்கை முறையை எளிதில் மக்கள் ஏற்க மாட்டார்கள். நமது மொழி, நமது சாதி, நமது சமயம் என்று அணுகி, மக்களுக்கு வெறியூட்டிப் போராட்டங்களில் ஈடுபடுத்தல் எளிது. இதுவே இன்றைய இந்தியாவில் நடப்பது. இந்நிலை அடியோடு மாறவேண்டும்.

எப்போழுது மாறும்? எப்படி மாற்றுவது? நடுவண் அரசு இந்த வகையில் அதிக ஆர்வம் காட்டிச் சிந்திக்க வேண்டும். திட்டங்கள் தீட்டவேண்டும். பொதுவாக யாருக்கும், எந்த வகையிலும் யாதொரு இழப்பும் இல்லை என்கிற நம்பிக்கை ஊட்டப்பெற்றால்தான் ஒருமைப்பாடு வளரும். மொழி, இனம், சமயம் தொடர்பான அமைப்புகள் மனிதனை வளர்த்த- வளர்க்கின்ற இயற்கைச் சூழ்நிலைகள். இவைகளிடம் மனிதன் கொண்டிருக்கின்ற பிடிப்புகள் தளர வேண்டிய அவசியமில்லை. மாறாக மொழிப்பற்றும் இனப் பற்றும் சமயப் பற்றும் செழித்து வளர்தல் வேண்டும். செழித்து வளர அரசு துணைசெய்தல் வேண்டும். எந்த ஒரு பிரிவினருக்கும் இந்திய ஒருமைப்பாட்டால் இழப்பு இல்லை என்கிற நிலை உறுதிப்படுத்தப்பெறுதல் வேண்டும். நாம் நம்மை வளர்த்துக் கொள்வது போலவே மற்றவையும் வளர வேண்டும்; அவற்றிற்கு நாம் துணையாக அமையவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடத்திலும் தோன்றவேண்டும். ஒன்றின் வளர்ச்சி பாதுகாப்பு என்பன அதனிடத்திலேயே அமைந்திருக்கின்றன. மற்றதன் வீழ்ச்சியில்