பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/372

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நுகர்பொருள்கள் கிடைக்க வழிவகை காணல்

தூய - எளிய ஆனால், வசதியான வாழ்க்கை கிராமப்புற மக்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரும்பாலும் அன்றாட அடிப்படைத் தேவைகளை (உணவு, உடை தொடர்பானவை) கிராமங்கள் திட்டமிட்டு உற்பத்தி செய்ய வேண்டும். கிராமத்தில் உற்பத்தி செய்யாத – செய்ய இயலாத பொருள்களைக் கிராமங்களுக்கிடையில் பண்டமாற்று முறையில் வாங்கிக் கொள்ளலாம். இந்த முயற்சியைக் கடந்த நிலையில் தேவையிருப்பின் கிராமங்களில் நியாய விலையில் பொருள்களை விற்கக்கூடிய பொதுப்பண்டக சாலைகள் கூட்டுறவு முறையில் நடத்தப் பெறுதல் வேண்டும். செலவுகள் குறைவதும் வரவைப் போலவே கருதப் பெறுதல் வேண்டும் என்ற உண்மை நடைமுறைக்கு வந்தாக வேண்டும்.

மூன்று நிறுவனங்கள்

கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான மூன்று நிறுவனங்கள் தேவை என்றார் அமரர் நேரு.

Every Village should have three things – a Panchayat, a Co-operative and a School.

என்று அமரர் நேரு கூறியதை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருதல் நல்லது. இந்த மூன்றும், அமரர் நேரு அவர்கள் பிரதமராக ஆட்சி செய்த காலத்திலேயே அமைக்கப்பெற்று விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆயினும் இவை மூன்றின் செயற்பாடுகள் எப்படி உள்ளன: இவை உண்மையாகவே கிராமங்களின் வளத்திற்கும் வலிமைக்கும் அடிக்கல்லாக அமைந்து விளங்குகின்றனவா? என்று ஆய்ந்தறிந்து தீர்வு காணுதல் வேண்டும்.