பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று திருக்குறள் கூறுகிறது. "பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!" என்பது சங்க இலக்கியம். திருமுறை

"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை"

என்றது. ஆதலால் பொன், பொருள் இவற்றால் அமையும் இன்பம் வெறுக்கத் தக்கதன்று. மேலும் அறவழியில் பொருளிட்டி முறையாக நுகர்ந்து வாழ்த்தல் அப்பொருள் இன்ப அன்பு நிலை எய்துதற்குரிய சாதனமும் ஆகும். இடைக் காலத்தில் "வாழ்க்கை நிலையில்லாதது" "பொன் நிலையில்லாதது" என்ற கருத்து பரப்பப்பட்டது. இந்தக் கருத்து முற்றிலும் பிழையன்று. நிலையில்லாதது என்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அவை பயனற்றவை. தேவையற்றவை, கூடாதவை என்பது முன்னோர் கருத்தன்று.

"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்"

–குறள் 333

என்று திருக்குறள் கூறும். ஆதலால், மானுட வளர்ச்சி பொருளைச் சார்ந்தது. பொருளாக்கத்தைப் பொறுத்தது. அதனால் திருக்குறள், "செய்க பொருளை" என்றும் "போற்றுவார்கள் பொருள் உண்டு" என்றும் கூறியது. ஆதலால், பொருளை உற்பத்தி செய்து போற்றி வாழும் நெறியே திருவள்ளுவர் நெறி.

பரந்த மக்கள் சமுதாயத்தில் வீடு தான் கடைசி எல்லையில் உள்ள ஒரு பகுதி. வீடு, கணவன் மனைவி என்ற பொறுப்புள்ள இரண்டு உறுப்பினர்களைக் கொண்டது. குழந்தைகள் – பேணப்படுபவர்கள்; வளர்க்கப்படுபவர்கள். குடும்பம் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த சூழலுடையதாக அமையவேண்டும். கணவன் – மனைவி இடையே உள்ள