பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/411

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

395

இன்று மனத்திற்கு அடிமையாகி மனம் ஆட்டிப் படைக்கின்ற வண்ணம் ஆடிப் பிழைப்பு நடத்துபவர்கள் மிகுதி. மனமடங்கச் செய்து மனத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி முறைமையாக வாழ்வோர் மிகமிகக் குறைவு. மனமது செம்மையாக, சுற்றுப்புறச் சூழ்நிலைகள் செப்பமுற அமைய வேண்டும். மனம், பொறிகளின் வாயிலாக இந்த உலகோடு தொடர்பு கொள்கிறது. அதாவது இந்த உலகத்தின் பொருள்கள் மனிதர்களோடு தொடர்பு கொள்வதன் வழி மனம் ஆசைவயப்படுகிறது. மனம் தனது ஆசையை அடையச் சூர்ப்பனகை, இராவணனையும் காமுகனாக்கியது போல ஆன்மாவின் கண் ஆசையைத் துாண்டி ஆசைப்பட்டதை அடைய முனைப்பு உண்டாக்குகிறது. இந்தச் சூழ்நிலையில் ஆன்மா தனது புத்தியை உபயோகப்படுத்தி மனதை அடக்கலாம். பலருக்குப் புத்தி இருப்பதே தெரியாது. சிலர் புத்தியை உபயோகப்படுத்துவதேயில்லை. மனம் பற்றிக் கொணரும் செய்திகளைப் புத்தியிடத்தில் கொடுத்து ஆய்வு செய்தாலே ஆன்மா பிழைத்து விடும். வாழ்ந்து விடும். மனம் தூய்மை பெற, ஆற்றலுடன் விளங்க மனிதன் வாழும் வாழ்நிலை - சமுதாய அமைப்பு செப்பமாக அமைதல் வேண்டும். தீமை பயக்கும் சூழ்நிலைகள், சார்புகளிலிருந்து மனிதன் விலகிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகள், சார்புகளைப் பொருத்தே வாழ்நிலை அமைகிறது. பலவீனமானவர்கள் சூழ்நிலைக்கு அடிமையாவார்கள். பலமுள்ளவர்கள் வாழ்நிலைக்குரிய சூழ்நிலை தேடி அமைத்துக் கொள்வார்கள். இப்படி இருந்தது. இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லி அழுது என்ன பயன்? இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்தித்துத் தக்க சூழ்நிலைகளையும் சார்புகளையும் அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை. மனம் பற்றி நின்று ஆன்மாவுக்குச் செய்திகளைத் தந்து வளர்ப்பதற்குரிய சூழ்நிலைகளைச் செப்பமாக அமைத்துக் கொள்ளல் அறிவார்ந்த வாழ்க்கை முறை.