பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

399


இல்லையே! சூடு, சுரணை எல்லாம் கெட்டுப் போய் விட்டதே! மானம் தொலைந்து விட்ட ஊழ், விதி என்ற தத்துவங்களை முறை பிறழப் புரிந்து கொண்டதன் பயனாய் நடலையாக அல்லவோ வாழ்கின்றோம். பொறிபுலன்கள் பொருளற்றுப் போயின! இந்த நிலையில் மானுடம் வெற்றி பெற இயலுமா?

இன்றுள்ள நமது நாட்டு நிலை, நமது சமுதாயத்தின் – உலக மாந்தரின் வாழ்க்கைப் போக்குகள் நம்மை, நமது உணர்வுகளைப் பாதிப்படையச் செய்யவேண்டும். அல்லது நாம் இந்த இழிவும் அவமானமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை ஏன்? இப்படி ஒருவாழ்வும் வாழவேண்டுமா? என்று கேட்க வேண்டும். இந்த உலகம் எப்படி இருக்கிறது? இது தெரிந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்! இதற்கு ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்! இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ண, சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய சிந்தனைப் போக்கே உலகத்தை மாற்றுதலுக்குரிய – இருக்கும் பொருந்தா நிலைகளை எதிர்த்துப் போராடக் கூடிய – போர்க்குணத்தைத் தரும். இன்னாதனவாக இருக்கும் உலகத்தை எதிர்த்துப் போராடாமல் இனியன காண்பது இயலாது.

இந்த உலக வரலாற்றை உற்று நோக்குங்கள்! இந்த உலகத்தின் இயற்கை அமைவை உற்று நோக்குங்கள். இயற்கையே போர்க்குணம் உடையதுதான்! இந்த உலக வரலாறு உழைப்பின் வரலாறேயாகும். மானுடம் வாழ்வதற்காக இந்த உலக இயற்கை அமைவுகளுடன் நிகழ்த்திய போராட்டத்தின் பயன்தான் கழனிகள், ஆறுகள், கால்வாய்கள், ஆலைகள், தொழிற்சாலைகள், சாலைகள், காடுகள், திருக்கோயில்கள், திருக்குளங்கள் முதலியன. இவையனைத்துக்கும் நிழலாக – ஒரு அழிவுப் போரும் தொடர்ந்து வந்திருக்கிற்து. போர்களால் ஏற்பட்ட அழிவும் ஒருவகையில் உழைப்பையே சாரும். இந்த அழிவுழைப்பு