பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மூச்சுக் காற்றினைக் குடிக்கும் மனிதனே! உனக்குத் தேவையான மூச்சுக் காற்றினைப் பெற ஒரு மரமாவது வளர்ப்பாயாக நல்ல வண்ணம் வளர்ப்பாயாக!

அடுத்துத் தண்ணீர்! "நீரின்றிமையாது உலகு" என்றது திருக்குறள். தண்ணீர் வளம் குறைந்த நாடு நமது நாடு. ஆதலால், இருக்கும் தண்ணீர் வளத்தையும் கிடைக்கும் மழைவளத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்திப் பாதுகாக்க வேண்டும். தண்ணீரின் தூய்மை காப்பாற்றப்படுவது அவசியம். தண்ணீரின் துய்மையைக் காப்பாற்றத் தவறினால் பல நோய்கள் தோன்றும். வாழ்க்கையின் நலம் அழியும். மரங்களை வளர்த்து மாமழையைப் பெற வேண்டும்.

அடுத்து உணவு, நமது நாட்டளவில் பெரும்பாலும் ஏழைகள் – நடுத்தர வர்க்கத்தினர் உணவில் போதிய அக்கறை காட்டுவதில்லை. கிடைத்ததைச் சாப்பிடுவார்கள்; கெட்டும் போவார்கள். ஒரு சிலர் சுவைக்காக வயிறுமுட்டச் சாப்பிடுவார்கள். இதுவும் தவறு. ஒவ்வொருவரும் அவரவர் உடல் அமைப்பு, உழைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். நல்ல மகிழ்வான மனநிலையில் பலருடன் கூடி உண்பது உடல் நலனுக்கு அவசியம்.

அடுத்து உடல், உழைப்பிற்கே உரியது. உடலுக்கும் போதிய உழைப்பு தராவிடின் பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல், உடல், நோய்வாய்ப்பட்டு அழியும். ஆதலால் உடலுக்கு நல்ல உழைப்புத் தேவை. உழைக்கும் உடம்புடையார் நீடுவாழ்வர். திறமையுடன் வாழ்வர்; புகழ்பட வாழ்வர். இருவேறு பயனும் பெற்றின்புறுவர்.

உடல் எவ்வளவு சிறப்புடையதாக அமைந்தாலும் உடம்பை இயக்கிப் பயன்கொள்ளும் ஆன்மா – உயிர் நல்ல வண்ணம் அமைந்தால்தான் அனைத்தும் சிறப்பாக இயங்க