பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/436

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அனுபவித்த அப்பரடிகள், ஏசு பெருமான், நபிகள் நாயகம் ஆகியோர் உபதேசங்கள் என்னாயிற்று? எரிநெருப்பில் விழுந்த பொரியென மனிதனின் பகை நெருப்பில் விழுந்து வீணாயிற்றே! மனித குலத்திற்கிடையே பகை வளர்வதற்குக் காரணமான வேறுபாடுகளாகிய கேடுகள் அறவே களையப் பெறுதல் வேண்டும். வேறுபாட்டிற்குக் காரண்மாகிய பிறப்பில் வேற்றுமை பாராட்டும் வேறுபாடுகள் உயர்சாதி, கீழ்ச்சாதி வேற்றுமைகள் அறவே அகற்றப் பெறுதல் வேண்டும்.

நாடு, நாடுகளின் எல்லை ஆகியன நிர்வாக நலன் கருதி அமைந்தவையே! ஆனால் அவை இன்று பிணக்குக்கு வித்தாக அமைந்திருக்கின்றன. நாடு, எல்லை காரணமாக ஏற்படுகிற முரண்பாடுகள் அகற்றப்பெற வேண்டும். “யாதும் ஊரே” என்ற தமிழ் தத்துவம் மனித குலத்தின் வாழ்க்கை நெறியாக அமைதல் வேண்டும். மனித குலத்தில் ஒருவருக்கு ஒருவர் உளங்கலந்த உறவினைத் தோற்றி வளர்க்கவே மொழிகள் தோன்றின. ஆனால் மொழி இன்று வெறித் தனத்தை ஊட்டுகிறது. சொல் மாறுபட்டாலும் பொருள் ஒன்றுதானே! மொழியின் காரணமாக ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைப் பகைப்பது அல்லது ஆதிக்கம் செலுத்துவது பகை நெருப்பை எளிதில் மூட்டுகிறது. மனிதன் பல்சுவை உணவை விரும்பி உண்பதைப் போல் பன்மொழி உணர்வையும் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். சாளரம் சாத்தப்பட்ட வீட்டுக்குள் ஒளியும் இல்லை. உயிர் மூச்சுக்குப் பயன்படும் தூய காற்றும் இல்லை. அதுபோலப் பன்மொழியறிவும், பல்வகை உணர்வும், இல்லாத மனித குல வாழ்க்கை செழித்து வளராது. ஆதலால் சாதி, குல, சமய, நாடு, அரசியல் எல்லை ஆகிய வேறுபாடுகள் அனைத்தும் சருகென உதிர்தல் வேண்டும். மனிதனை மனிதனோடு மோதவிடும் எந்தவிதப் பகைமைக் கேடும் அறவே களையப் பெறல் வேண்டும்.

மனித சமுதாயத்தைச் செழுமைப்படுத்திப் பண்படுத்தி வளர்க்கவே சமய நெறி தோன்றிற்று: வழிபாடு தோன்றிற்று: