பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/461

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

445


சமூகத்தைத் தாக்கி உருக்குலைத்து விடாமல் சொத்துடைமைகள் மாறும் முறைகளை ஏற்றல் நல்லது. ஒன்றிரண்டு உதாரணங்கள். திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது சொத்துடைமைக் குடும்பம், சொத்துடைமை இல்லாத அல்லது குறைவாக உள்ள குடும்பத்தில் சம்பந்தம் செய்யலாம். மகப்பேறு இல்லாத சொத்துடையவர்கள் சொத்துடைமை இல்லாத அல்லது குறைவாக உள்ள குடும்பத்தில் மகவு ஏற்கலாம். நமது நாட்டில் அனைவருக்கும் உரிய நலன்கள் அல்லது தேவைப்படும் நலன்கள் இன்னமும் கிடைக்கவில்லை. குடிக்கும் தண்ணீர், பெறும் கல்வி, மருத்துவ வசதி போன்றவை, இன்னமும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. ஒரோவழிக் கிடைப்பதும் தரமாகக் கிடைப்பதில்லை இதனால், சமூக ஏற்றத் தாழ்வுகள் அகலமாகிக் கொண்டே போகின்றன. ஏற்றத் தாழ்வுகள் வளர, வளர சமூக உறவுகள் பாதிக்கின்றன. ஆதலால், நிறைந்த சொத்துடையவர்கள் எல்லாருக்கும் நல்ல குடிதண்ணீர் கிடைக்கும் ஏற்பாடுகளுக்குத் தங்களது சொத்துக்களை எழுதி வைக்கலாம்; பயன்படுத்தலாம். பழைய காலத்தில் இங்ஙனம் செய்தார்கள். தண்ணீர்ப் பந்தல் வைத்தார்கள். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊருணிகள் அமைத்தார்கள். இன்று இந்த எண்ணம் பரவலாக இல்லை. ஆனால் தேவை. அதுபோலவே, தரமான கல்வி தேவைப்படும் மக்களுக்குத் தரமான கல்வி - நகர்ப்புற மக்கள் பெறக்கூடிய கல்வி போல பெருமளவிற்கு வசதிகளுடைய கல்வி நிறுவனங்களைத் தோற்றுவிக்கலாம். இந்தப் பணி மூலம் சமூகம் வளரும்; உறவுகளும் ஆழம்பட்டு நிற்கும். இந்த நூற்றாண்டில் வேலை வாய்ப்பின்மை என்பது பரவிவரும் ஒரு தீமை. இத்தீமை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறினால் சமூகம் பல தீமைகளுக்கு ஆளாகும். ஆதலால், படித்த, உழைத்து வாழ்வதில் ஆர்வம் காட்டக்கூடிய இளைஞர்கள் தொழில் செய்து பிழைக்கக்கூடிய வகையில் தொற்சாலைகளை அமைத்துத் தரலாம்; அமைத்துத் தர