பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/466

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தனிமனித உரிமை வேறு – தனிமனித வளர்ச்சி வேறு. நமது மதிப்பிற்குரிய காமராஜர் அவர்கள் சேவையினால் சிந்தனையால் தன்னை வளர்த்துக் கொண்டவர்கள். தனிமனித வளர்ச்சி அவர்களிடத்திலே இருப்பதைக் காண்கிறோம் – நேருஜியிடத்திலும் அந்தத் தனிமனித வளர்ச்சியை நாம் காண்கிறோம். தனிமனித வளர்ச்சி பாராட்டற்குரியது தான். ஆனால் ஒருவர் ஓராயிரம் வேலி நிலத்திற்கு மிராசுதாராக இருக்க அவரே ஏக போகமாக அந்தப் பெரு நிலத்தை வைத்து அனுபவித்துக் கொள்ள அந்தத் தனிமனித வளர்ச்சி பயன்படக்கூடாது.

தனிமனிதனுடைய வளர்ச்சி பரிணாம வளர்ச்சி இல்லாமல் சமுதாயம் நலம்பெற முடியாது. ஆனாலும், தனிமனித வளர்ச்சியால் சமுதாயத்திற்கு ஒரு தீங்கு வருகிற பொழுது நிச்சயமாக அதனை ஓர் அளவிற்குள், எல்லைக்குள் உட்படுத்தியதாக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. நேருஜியும் காமராஜரும் தனி ஆற்றலால் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள். சுதந்திர பாரதத்தில் 46 கோடி மக்களும் நேருஜியின் தலைமைக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள் என்றால், அது நெருஜியின் தனிமனித வளர்ச்சி. அயூப்கான் போலவோ ஜின்னா போலவோ நேருஜி ஆகியிருந்தாரானால் அவரது தலைமை தூக்கியெறியப்பட்டிருக்கும் என்பதிலே கருத்து வேறுபாடில்லை. தலைமை அமைச்சர்கள் – அனுபவமிக்கவர்கள் ஆகியோர் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று ராஜினாமா யோசனையை முதன் முதலில் வெளியிட்ட நமது காமராஜர் முதற் கொண்டு “நேருஜி ராஜினாமாச் செய்யக்கூடாது” என்று கூறக் கூடிய அளவில் நேருஜியின் தலைமை மதிக்கப்படுகிறது – போற்றப்படுகிறது. காரணம் நேருஜியின் தனிப்பட்ட ஆற்றல் – தனிப்பட்ட சக்தி, ஆம். கவர்ச்சிக்கும் சக்தி, இந்தச் சக்தி பலருக்குக் கிடைக்க முடியாதுதான். அதற்குக் காரணம் அன்றே கொஞ்சம் வளர்ந்த சமுதாயத்தில் தோன்றியவர் நேருஜி என்பதுதான்.