பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/473

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

457


இல்லறத்துக்கு வாய்த்த துணை என்று வாளா கூறாமல் அதன் பயனாகவே “துணை நலம்” என்று சொல்லும் பாங்கை உய்த்தறிக.

கற்பு, நுண்ணிய நலமுடையது. அன்பின் ஆக்கம் கற்பு. மனம், வாக்கு, உடலைக் கடந்தது கற்பு. இத்தகு புனிதக் கற்பைச் சிறை காக்க இயலாது. தலைவனாலும் காத்தல் இயலாது. ஆதலால் தற்காத்து என்றார். காமம் ஒரு பசி, பசி தீர்த்துழியன்றி வேட்கை தீராது. கணவனின் கற்பினைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பும் தலைவியிடமே உள்ளது. ஆம்! தலைவனைப் பரத்தையின் வழிச் செல்லாமல் தடை செய்து காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைவியினுடையதேயாம்.

தலைவன் – கணவன் புகழ் பெரியது. அது வழிவழியாக ஈட்டப்பட்டதாகக் கூட அமையலாம். கணவன் பீடுநடை போட வேண்டுமானால், தலைவி – வாழ்க்கைத் துணை நலம் வளத்திற்குத் தக்க வாழ்வு அமைத்து ‘இல்லை’ என்ற சொல் இல்லாமல் செய்து வருகின்ற விருந்தினை உபசரித்து அனுப்புவாளாயின் அவள்தம் குடும்ப நிர்வாகம், அன்பியல் தழுவிய வாழ்வியல் தலைவனுக்கு – கணவனுக்குப் பெருமையைத் தருகிறது. ஒரோவழி இழுக்கு வந்தாலும் அந்த இழுக்கு வழுக்கலாகிவிடாமல் தடுத்து மடை மாற்றி வாழ்வியலைச் செப்பம் செய்து உயர்த்துவதே வாழ்க்கைத் துணை நலம். திருநீலகண்டர் மனைவியும் கண்ணகியும் இதற்கு எடுத்துக்காட்டாவர்.

கண்ணகி தன் கணவனின் புகழை, தன் குடும்பப் புகழைக் காக்கவே பாண்டியனின் அரசவையில் போராடினாள். கணவனின் புகழைக் காத்தல் வேண்டும். குடும்பத் தலைமகள் – வாழ்க்கைத் துணை நலம் சோர்வற்றவளாகத் திகழ்தல் வேண்டும். வாழ்க்கைத் துணைநலமே இன்பத்திற்கு