பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


– அறத்தின் ஆக்கத்திற்கு, புகழுக்கு – அனைத்திற்கும் அடிப்படை

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

–குறள் 56

என்பது திருக்குறள்.

விருந்தோம்பல் என்பது உலகத்தழீஇய பண்பு. நமது நாட்டில் விருந்தோம்பல் பண்பைப் பாராட்டிப் புகழாத இலக்கியம் இல்லை. தொல்காப்பியம் முதல் திருஞான சம்பந்தர் தேவாரம் வரை விருந்தோம்பல் பண்பு பாராட்டப் படுகிறது. பெரியபுராணத்தில் விருந்தோம்பற் பண்பு போற்றப்படுகிறது.

விருந்தினர்கள் – புதியவர்கள்; முன்பின் அறிமுகம் ஆகாதவர்கள். இது மரபுவழிக் கருத்து. வீட்டிற்கு வரும் விருந்தினரை இனிய முகத்துடன் வரவேற்று உணவளித்து உபசரிக்க வேண்டும். உணவைவிட உபசரணை முக்கியம். உபசரணையின் தரம் குறைந்தால் விருந்தினர் வருந்துவர்; விருந்தினரை உபசரிப்பது ஒரு பண்புமட்டுமல்ல; கலையும் கூட இல்லற வாழ்க்கையின் கடமை வரிசையில் விருந்தோம்பலும் இருக்கிறது.

செல்வி! நீ எப்போதும் விருந்தினரை வரவேற்று உபசரிக்க ஆயத்தமாக இரு! குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பண்டங்களைச் சேகரித்து வைத்துக் கொள்! கணவன் வீட்டிலிருக்கும் பொழுது விருந்தளிப்பது என்பது முறை. தவறுகள் நிகழாமல் தவிர்க்க இது அவசியம். கூடுமான வரையில் விருந்தினரை அழைப்பது, குறித்த நாளில் குறித்த நேரத்தில் வரும்படி அழைப்பது ஆகிய நற்பழக்கங்களை நீயும் பழகிக்கொள்; விருந்தினரையும் பழக்கு.

நமது நாட்டில் விருந்தினர் திடீரென்று வந்து விடுவர். கணவனும் வீட்டில் இல்லை. என்ன செய்வது? அறச்சங்கட