பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/504

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நான் அதைக் கண்டதில்லை! ஆனால் கடவுள் பெயரால் மனித குலத்திற்கு இழைக்கப்படும் அநியாயங்களைக் காண்கிறேன். இன்று ஏமாற்றுக்காரர்களுக்குக் கடவுள் ஒரு சாதனம்; கருவி! எனவே, நான் கடவுளைப் பற்றிக் கவலைப்படவில்லை! எனக்குக் கவலையெல்லாம் மனிதனைப் பற்றித் தான்! குறிப்பாகத் தமிழனைப் பற்றியேதான்!” என்றார். ஆரிய வேத மத சாத்திரங்களை ஆராய்பவர்களை நாத்திகர்கள் என்று பட்டம் கட்டித் துன்புறுத்தினார்கள் என்பதை இரணியன் வரலாறு காட்டுகிறது. மத புராணங்களில் - இதிகாசங்களில் கூறப்படும் பிறர் மனைவியைக் கூடிய கயவர்களுக்குக் கூட இராவணனுக்குக் கிடைத்த அளவு கண்டனம், தூற்றுதல் இல்லை! இராவணன் சீதையைத் தீண்டக்கூட இல்லை. ஆனால், இராவணனுக்கு நாடு தழுவிய பழி தூற்றல் ஏன்? இராவணன் உயர் சாதியன் அல்லன். முனிவன் அல்ல. இதனால், நமக்குப் புரிவது நாத்திகம் என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது தான்! நாத்திகம் என்பது ஆரிய சாத்திரங்களை கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் மீது சூட்டப்படும் பட்டம்! கடவுள் மறுப்பாளன் என்று பறை சாற்றுவார்கள். உண்மையில் நாத்திகத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

பிறப்பில் வேற்றுமைகள்! குலம் கோத்திர வேறுபாடுகள் மனிதகுலத்தினை உருக்குலைக்கும் கொள்கைகள்! கடவுளுக்கே சாதி! இன்ன சாதியினர்தான் கடவுளைப் பூசிக்கலாம். சோறு படைக்கலாம்! பணக்காரன் - ஏழை ஏற்பாடுகள்! சுரண்டும் வர்க்கத்திற்குப் பாதுகாப்பு ! புரோகிதம், மதம் இவற்றிற்குத் தலைமை தாங்க உயர் சாதியினருக்கே உரிமை! சமஸ்கிருதமே தேவ மொழி! தமிழ், சூத்திர மொழி! தமிழில் வழிபாடு கூடாது! தமிழனும் பூசனை செய்யக்கூடாது! இவற்றுக்கு மாறானவையெல்லாம் நாத்திகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள்!