பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/510

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வண்டு உருள்வதில்லை, ஓடுவதில்லை, வண்டியின் பிற உறுப்புக்களோடு ஒத்துழைப்பதிலை, இயங்குவதில்லை. வண்டியின் சக்கரத்தில் ஏற்பட்ட கோட்டத்தின் குறையறியாமல் வண்டியை அமுக்கிச் செலுத்தினால் வண்டிக்கும் சேதம் ஏற்படுகிறது; செலுத்துபவனுக்கும் துன்பம் ஏற்படுகிறது. அது போலத்தான் மனக்கோட்டங்களும் கூட. நம்முடைய மன வாழ்க்கையில் நெறிமுறைகளைக் கடந்த மனக்கோட்டங்கள் தோன்றிவிடும். வாழ்வு துன்ப மயமாகி விடுகிறது. அதிருப்தி தலைகாட்டுகிறது. அலுப்புகளும் சலிப்புகளும் தோன்றிவிடுகின்றன. தற்கொலைகளும் கொலைகளும் மலிகின்றன. வஞ்சினமும் காழ்ப்பும் வையகத்தில் இடம் பெறுகின்றன. ஆதலால், வளைந்து செல்லும் சாலைகளை நேராக்குவதை விட தொங்கிவிழும் மீசைகளை முறுக்கி நேராக்குவதைவிட, ஏன்? இடிந்த கோயில்களை எடுப்பதைவிட ஒப்பற்ற பெரும்பணி மனக் கோட்டங்களைத் தவிர்ப்பது. மனக்கோளாறுகளைத் தவிர்ப்பது.

மனக் கோளாறுகளில் பலவகை உண்டு. மனம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியல்லாமல் நெறிமுறை பிறழ்ந்து விடுவதால் பல்வேறு வகையான துன்பங்கள் ஏற்படுகின்றன. இந்த மனப்பிறழ்வுக்கு, இன்றையச் சூழ்நிலையில் மனப்பிறழ்வுடைய மனிதனையே பொறுப்பாக்குகிறது சமுதாயம். தனிமனிதனுக்கு அவனுடைய மனப்பிறழ்வுகளில் இருந்து சிறந்த முறையில் அமைத்துக் கொள்ளாததால் உள்ள பொறுப்பு ஓரளவு உண்டு. ஆயினும், ஒருவருடைய மனப்பிறழ்வுக்கு வீடும், நாடும், நாட்டின் சூழ்நிலைகளும் சமுதாயப் பழக்கவழக்கங்களும் கூட மிகுதியும் பொறுப்புடையதாக இருக்கிறது என்பதே உண்மை.

மனக்கோளாறு ஏற்படுவதற்குரிய பல காரணங்களில் தாழ்வு மனப்பான்மையும் ஒன்று. நான் ஏழை, பாமரன், அனாதை என்ற உணர்வுகள் மனிதனைத் திகிலடையச்