பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/513

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

497


ஏதாவது தவறான முடிவை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் அந்த ஆளைச் சிந்திக்கும் பொழுதெல்லாம், சந்திக்கும் பொழுதெல்லாம் – மன எரிச்சல் வருகிறது. தான் துய்த்து மகிழ விரும்பிய ஒன்றைப் பிறிதொருவர் தடைசெய்யும் பொழுதும், அல்லது பிறிதொருவர் தட்டிப் பறித்து இவர் காண அவர் அதை அனுபவிப்பதும் மன எரிச்சல் நோயைத் தோற்றுவிக்கிறது. சிறப்பாகக் காதல் துறையில் ஏற்படும் ஏமாற்றத்தில் ஏற்படுகிறது. அண்மைக் காலமாகப் புகழ் வேட்டலிலும் இந்த மன எரிச்சல் நோய் கால் கொண்டிருக்கிறது.


தனக்கு உடன்பாடில்லாதவரை அல்லது பகைவரை மற்றவர் புகழக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் தாங்க முடியாத மன எரிச்சல் நோய் உண்டாகிறது. தெளிவாகச் சொன்னால் அழுக்காற்றின் விரிவாகவும், பயனாகவும் இருக்கிறது மன எரிச்சல் நோய், கண்ணேறு படுதல் – திருஷ்டி போடுதல் ஆகியனவும் மன எரிச்சல் நோயின் விளைவே. மனஎரிச்சல் நோய் மிகும் பொழுது சினமாக வடிவம் பெறுகிறது. இதே மன எரிச்சல் நோய், உடல், பொருள், வலிவற்றோரிடம் இருக்குமானால் “ம்... தெரியாதாக்கும்!” என்று உதட்டைப் பிதுக்குதலும், ஓரக்கண் அடித்தலும் நிகழ்கின்றன. மன எரிச்சல், இனிய பொருள்களைக் கூடத் துன்பமுடையதாக்குகின்றன. மன எரிச்சல் உடையவர்களுக்குப் பச்சைத் தண்ணிரும் சுடும்; கோயில் மணி ஒலியும் கூகையின் குரலாகக் கேட்கும் இந்த மன எரிச்சல் நோய் உடலையும் கெடுக்கும்; மன நலத்தையும் கெடுக்கும்; வளத்தையும் கெடுக்கும்; வாழ்வையும் கெடுக்கும். ஆதலால், மனத்தைச் சிறந்த முறையில் பழக்கிப் பண்படுத்த வேண்டும். பொதுவாக நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். தன்னலத்தை விட்டுப் பிறர் நலத்தைப் பேணுகின்ற பண்பை ஏற்றுக் கொண்டாலே மனம் தூய்மை பெற்று இலங்கும். பிறருக்குரிய மரியாதைகளைத் தந்து, பாராட்ட வேண்டியவற்றைப் பாராட்டிக்