பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/532

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

516

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டு சொல்வான். அழுக்காறுடையான் ஆக்கம் பெற முயற்சி செய்வதில்லை. அறிவறிந்த ஆள்வினை இல்லாதானின் அவா, தீது, வெகுளி, சேர்ந்தாரைக் கொல்லும். உட்பகை புற்றுநோயிலும் கொடியது. ஆதலால், பொங்கலுக்கு முன்பே இந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் மனிதன் விலக வேண்டும். இதனைத் திருக்குறள்,

“மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
–குறள் 34

என்று கூறுகிறது.

மனத்துக்கண் மாசில்லாது வாழ்தலே அறவாழ்க்கை. மற்ற அறங்களெல்லாம் ஆரவாரத் தன்மையுடையன. ஆதலால், குற்றம் குறைகளையும், நிறைகளையும் கணக்கிட்டுக் குற்றங்களை நீக்கிக் கொள்க; குறைகளைத் தவிர்த்திடுக! நிறைகளைப் பெற முயலுக. பகைமையை விலக்குக! அழைத்துப் பேசுக உறவுகளை வளர்த்திடுக! உடனிருந்து உண்க!

தனிமனித வாழ்க்கை சிறப்புற அவன் வாழும் குடும்பமும் சமூகமும் நாடும் நன்றாக அமைய வேண்டும். குடும்பம் நடத்துதல் ஒரு கலை, பண்பாடு! மனநிறைவும் மகிழ்ச்சியும் அமைதியும் ஆற்றல்மிக்க அன்பும் குடும்பத்தில் நிலவ வேண்டும். செல்வத்தினால் மட்டும் வாழ்க்கை சிறப்பதில்லை! “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றனர். ஆதலால், குடும்பத்தில் அன்பு தழீஇய உறவுகளும், இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழும் பாங்கும் நிலவ வேண்டும். சமூகம் உற்றுழி உதவும் பாங்குடையதாகவும் ஒருமைநலம் மிக்கதாகவும் அமைய வேண்டும். ஒருவர் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும் என்ற உயர் நெறி சமூகத்தில் நிலவ வேண்டும்; நாட்டில் பாதுகாப்பும் உத்தரவாதமும் தரக்கூடிய அரசு வேண்டும்.