பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/541

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

525




போகிப் பண்டிகை வந்துபோனால் போதாது. நாட்டு மக்களை நலிவடையச் செய்யும் தீமைகள் போயாக வேண்டும். நல்லனவெல்லாம் வளரவேண்டும். சர்க்கரைப் பொங்கல் பொங்கும் பானை மாறுவது போல, உழைப்பின் களம் புதுமை பெற வேண்டும். சமைப்பதற்குரிய எரிசக்திக்கு விறகைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். சோலாரிலிருந்து (கதிரொளி வெப்பத்திலிருந்து) எரிசக்தி பலவாகி விட்டன. முறைசாரா எரிசக்தியைப் பயன்படுத்துதல் வேண்டும். விறகுக்காக மரங்களை வெட்டுதல் கூடாது. நமது சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து நமக்கு ஜீவ சக்தியைத் தருபவை மரங்கள்; தாவரங்கள்!

நோயற்ற வாழ்க்கையே இன்பமான வாழ்க்கை! இன்று நம்முடைய மக்கள் பலரிடம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. ஏன்? “இவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும்” என்பது தெரியவில்லை. நல்ல சத்துணவு சாப்பிடுவதில்லை. சுவைக்காகச் சாப்பிடுகின்ற பழக்கம் பலரிடம் இருக்கிறது. உணவு உண்ணும் பழக்கத்தில்கூட உடலுக்கு நலம் தரும் உணவை முதலில் உண்ண வேண்டும். பின்தான் சுவைக்குரிய உணவை உண்ண வேண்டும். நல்ல சத்துணவு உண்பதற்குரிய வசதிகள் இல்லையே என்று கூறலாம். அது உண்மையேயானாலும் இயற்கையில் கிடைக்கும் பலவகை உணவுகள் உள்ளன. முருங்கை ஏழைகளின் கற்பக தரு. முருங்கைக் கீரை, பூ, காய் முதலிய நல்ல முதல்தரமான சத்துணவு. ஏன்? நெல்லை ஆலையில் அறைக்காமல் குற்றிப் பயன்படுத்தினாலே நல்ல சத்துணவுதான்! “நல்ல உடலில்தான் நல்ல மூளை”, “நல்ல உடலில்தான் ஞானம்” என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. போகி நாளன்று பொருந்தாச் சூழ்நிலைகளை மாற்றுங்கள்! பொருந்தாப் பழக்கங்களை மாற்றுங்கள்! பொருந்தா உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள்! மதுவை அறவே விலக்குவீர்; வேண்டாம், வேண்டாம் புகை பிடிக்க வேண்டாம்!