பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பனவற்றையெல்லாம் பரிசீலனை செய்யவே தேர்தல் முறை கையாளப்பெற்றது. சமுதாயம் வளர்ச்சியுறுவதன் காரணமாகக் கருத்து மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படக் கூடும். அவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒருநாடும் சமுதாயமும் முன்னேற வேண்டும். அதற்காகவே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. மக்களாட்சி முறைக்கும் தேர்தலுக்கும் வேண்டிய இன்றியமையாத பண்பு தன்னுடைய கருத்துக்கு மாறுபட்டிருக்கிற கருத்துக்களையும் கேட்டு சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவதாகும். பிற கருத்துக் களை விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்ளாது தன்னுடைய கருத்தே முற்றிலும் சரியானது-அதில் குற்றங்குறை இருக்க முடியாது என்ற பிடிவாதம் மக்களாட்சி முறைக்கு ஏற்புடைத்தல்ல. அப்படியானால் கொள்கை உறுதிப்பாடு வேண்டாமா? என்ற கேள்வி எழக்கூடும். பிடிவாதம் வேறு- கொள்கை உறுதிப்பாடு வேறு. தன்னுடைய கருத்துக்கு முரண்பட்ட கருத்துக்களையும் கேட்டு கருத்தின் அடிப்படையிலும் விவாத ரீதியிலும் விமரிசனம்செய்து எதிர்க் கருத்து சரியல்ல என்று ஒதுக்குவதன் மூலமே கொள்கையில் உறுதிப்பாடு தோன்றமுடியும். எதிர்க் கருத்துத் தெரியாமல் கொள்கை உறுதிப்பாடு என்று கூறுவது செக்குமாடு, தான் சுற்றிய தூரத்தைக் கணக்கிட்டு உலகத்தைச் சுற்றினேன் என்று கூறுவதாகும்.

மற்றும், இங்கு கருத்து விமரிசனமே தவிர மனித விமர்சனம் அல்ல. கருத்து மாறுபாடேயொழிய மனித மாறுபாடல்ல. உயர்ந்த ஜனநாயக வாழ்க்கையில், பகைமைக்கும் மாச்சரியத்திற்கும் இடம் கிடையாது. ஜனநாயகத்திலும் தேர்தலிலும் பகைமையையும் மாச்சரியத்தையும் காட்டுபவர்கள் ஜனநாயகத்துறையில் வளராத-பக்குவம் அடையாத சிறு பிள்ளைகளாகவே கருதப்பெறுவர். மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு நிற்கும் கட்சிகள் அனைத்துமே மக்கள் நலனை இலட்சியமாகச் சொல்லியே நிற்கின்றன. தம் தம்