பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/576

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

560

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆதலால் நட்புச் செய்க! தேர்ந்து தெளிந்து நட்புச் செய்க! நண்பனின் வாழ்க்கையில் ஒன்றாகுக! கடமைகளைச் செய்க! உரிமைகளைப் பெறுக! உரிமைகளை வழங்கிடுக! உடனிருந்து உண்க! கலந்து பேசி மகிழ்க! வாழ்வித்து வாழ்க! இன்புறுத்தி இன்புறுக! இதுவே. நட்பு!இதுவே அருள்நலம் சார்ந்த நட்பு. இத்தகைய நட்பில் கடமையும், உரிமையும், உணர்வும் ஒன்றாக இனம் கண்டு கொள்ள முடியாதபடி ஒன்றாகி விட்டன. இத்தகு நட்பு வையகத்து வாழ்க்கையை வானகத்து வாழ்க்கையாக மாற்றும். மண்ணில் விண்ணகத்தை படைக்கும் ஆற்றல் தூய நட்புக்கே உண்டு. வேற்றுமை இன்னதென்று தெரியாமல் பழகுவதே நட்பு. இத்தகைய நட்பில் ஆக்கம் தவிர வேறொன்றுமில்லை. ஒரோ வழி சூழ்நிலையின் காரணமாகப் பொறுத்தாற்றிக் கொள்ள முடியாத கூடா ஒழுக்கம் தோன்றிடின் மெல்ல விலகுக! பொறுத்தாற்றிக் கொள்க! யார் மாட்டும் அந்நண்பனின் குற்றங் குறைகளைச் சொல்லற்க! தூற்றாது இருந்திடுக! தவறு செய்யாத நன்னெஞ்சின் நயப்புடன், அவர் பழகிய காலத்தில் காட்டிய நட்டாங்கிழமையால் செய்த நல்ல உதவிகளை எண்ணி மகிழ்ந்திடுக! இங்ஙனம் பழகின் நட்பு வளரும். இன்ப அமைதி வளரும். தவறுகள் செய்த பிறகும் அவர்பால் சினம் கொள்ளாது அன்பே காட்டுக.

கலந்து பழகிய ஒருவர் பிரிந்த பொழுது, அவரைத் தூற்றுவது வறட்சித் தன்மையுடையது. தொடர்ந்து நட்பிற் பிரிவு மட்டுமின்றிப் பகையையும் வளர்க்கும். பகை மூண்ட பிறகு, ஒருவருக்கொருவர் வசைச்சொற் பரிமாற்றங்கள் நிகழும். அதனால் இருவர் வாழ்க்கையுமே பாதிக்கும். ஆதலால் தூற்ற தூர விலகுகின்றார். தேர்ந்து தெளிந்து நட்பினைப் பெறுக பெற்ற நட்பினைப் பேணி வளர்த்துப் பாதுகாத்திடுக! நட்பு வாழ்க்கையில் அனைத்து உரிமைகளையும் வழங்கிடுக! நட்பும் காட்டுக! நட்பும் பெறுக! எந்தச் சூழ்நிலையினும் பொறுத்தாற்றும் பண்பே நட்புக்கழகு. துற்றாமை தூய நட்புக்கு இலக்கணம்.