பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

133


13. "தமிழய்யா" கதிரேசன்

        காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்
        காவிரியின் செழிப்பில் பூஞ்சோலைகளின் அமைவில்
        பூவாளுர் என்ற ஊர் தோன்றிச் சிறந்தது!
        பூவாளுர் இயற்கை எழில் பூத்தது;
        ஏரி நிறைந்தனைய செல்வம் உடையது
        இன்பத் தமிழும் வளர்ந்த மண்!
        மகாவித்துவான் தியாகராசச் செட்டியார் பிறந்த ஊர்!
        பூவாளுரில் பிறந்து பனசையில் தமிழ் கற்றுக்
        குன்றக்குடியில் குடியேறிய குணக்குன்று,
        கதிரவன் எனத்திகழும் கதிரேசன் அவர்கள்
        நலம் பாராட்ட முன்வந்து
        அடிக்கல் போட்டவர் நமது 'எழுத்துச் செம்மல்'
        ஊருக்கும் நாட்டுக்கும் உனதருமை காட்டினார்!
        சந்தனக் கடைக்கும்
        பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டுமோ!
        நாமும் நமது கவிஞர் பரமகுருவும்
        "தமிழய்யா” என்றே அழைப்போம்
        நின் அன்பு எங்களை ஈர்த்தது
        குட்டுகள் பல பெற்றனர் மாணவர்கள் உன்னிடம்!
        ஐயா, தமிழய்யா! இளையோருக்கும்
        மகளிர்க்கும் தமிழ் கற்றுக் கொடுப்பீர்!
        குன்றக்குடியில் தமிழால் வாழ்க!
        என்றுமுள தமிழ்போல் வாழ்க!
        இனிதே வாழ்க! வளர்க!