பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
முனைவர் இ. சுந்தரமூர்த்தி

துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கியவர். தம் எழுத்தாலும் பேச்சாலும் ஆளுமைத்திறத்தாலும் அரியபணிகள் ஆற்றியவர். சமயப் பணிகளில் எத்துணை அளவு ஈடுபாடு உண்டோ அத்துணை அளவு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டுச் சமூக, சமய விழிப்புணர்வு ஊட்டியவர். குன்றக்குடி கிராமத்தை நாட்டின் முன்மாதிரியாக உருவாக்கிக் காட்டியவர். அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் பொதுமைநெறி மிளிர்ந்தது. ஆன்மிக உலகிலும் சமயப் பொதுமைநெறி போற்றிய பெருந்தகை. தமிழின், தமிழரின் அடையாளமாக விளங்கும் திருக்குறளை நாடெங்கும் பரப்பிய நற்றமிழ்ச் சான்றோர். தமிழைச் சமயந்தொறும் நின்ற தையல் என்பார்கள். அடிகளார் சமயந்தொறும் நின்ற தலைவர்களால், சான்றோர்களால் போற்றப்பெற்றவர். பாங்கறிந்து பட்டிமன்றத்திற்குப் பொலிவும் வலிவும் சேர்த்த அறிஞர் பெருந்தகை. அளவை நெறிநின்று அடிகளார் ஆற்றிய பொழிவுகள் நல்லறிவை ஊட்டுவன.

அருந்தமிழுக்கு அடிகளார் ஆற்றிய பணிகள் பல. அவர்தம் படைப்புகளையெல்லாம் தொகுத்துப் பல்வேறு தொகுதிகளாகத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கி வருகின்ற மணிவாசகர் பதிப்பகம் பாராட்டிற்குரியது. இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் அடிகளார் ஆற்றிய பல பொழிவுகளும், இயற்றிய பல நூல்களும் பல தொகுதிகளாக வெளிவருவது தமிழுக்கும் தமிழர்க்கும் வாய்த்த பெருஞ்செல்வம்.

அடிகளார் பங்கேற்றுச் சிறப்பித்த கவியரங்கங்கள் பல. புகழ் பூத்துப் பொலியும் இன்றைய கவிஞர்கள் அனைவரும் அடிகளார் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றியவர்கள்தாம். அடிகளாரின் கவியரங்கத் தொடக்கக் கவிதைகளும், கவிஞர்களை அறிமுகம் செய்யும் அரிய பாங்கும் எண்ணிஎண்ணி மகிழத்தக்கதாய் இலங்குவன. அடிகளார் கவியரங்கில் பாடிய கவிதைகளும், பல்வேறு காலங்களில் அறிஞர் பலரையும் பாராட்டி எழுதிய கவிதைகளும், நாள்வழிக் கவிதைகளும் இத்தொகுதியில் தொகுக்கப்பெற்றுள்ளன.

கவியரங்கக் கவிதைகளில் அடிகளாரின் பல்துறைப் புலமைக் கூறுகளும் புலனாகின்றன. 1968ஆம் ஆண்டில் கோவையில் நிகழ்ந்த காந்தியடிகள் - பாரதி விழாக் கவியரங்கில் அவர் பாடிய தொடக்கக் கவிதையில் அண்ணல் காந்தியடிகளையும் மகாகவி பாரதியையும்