பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


27. நீளுலகில் வாழ்வாய் நிலைத்து
(அண்ணா)

நாடு புகழ்ந்தேத்தும் நல்லபே ரறிஞன்
பாரினுள் ளோர்க்குப் பைந்தமிழ்ச் சாரதி
மலராடு சோலையில் வண்டாடு புதுமலர்
வழக்காடு மன்றத்தில் தேர்ந்த வழக்காடி
இன்னபுகழ் சேர்த்த எமதருமை அண்ணா
தாங்குபுகழ்த் தமிழினத்தின் தானைத் தலைவன்
ஓங்கியசீர்ப் பாரதத்திற் குற்ற தனித்தலைவன்
தரணிபுகழ் அன்னைத்தமிழின் தவப்புதல்வன்
வள்ளுவத்தை உலகுணர வைத்தவொரு வான்விளக்கு
தெள்ளுதமிழ் நெஞ்சில் தேன்சேர்க்கும் பேச்சழகன்
சிரித்த முத்தழகன் செந்தமிழின் நாவழகன்
இரக்கத் தனிஊற்றாம் ஏற்றத்தின் சாயல்
மலரினை மொய்த்து மயங்கிச் சுழன்றாடும்
வண்டாய்த் தமிழுலகம் வாயாரப் போற்றி மகிழ்ந்து
அண்ணா அண்ணாவென் றழைத்திடவே வாழ்ந் துயர்ந்த
எமதருமை அண்ணா எங்குற் றனைநீயோ?
நின்னை வளர்த்த தமிழ்மறந்து சென்றனையோ?
வேறுலகம் சென்றனையோ? விண்ணகந்தான்
                                        போயினையோ?
பாரினில் பஞ்சைப் பராரிகள் வாழ்ந்திடவே
படியரிசி தானளக்க நிதிதேடிச் சென்றனையோ?
செகத்தில் சிறந்த சேலத்து நல்விரும்பை
விலைகூறச் சென்றனையோ வேறுசெயப்
போயினையோ?
நின்னைப் பிரிந்த தமிழ்என்ன ஆவதுவோ?