பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அறிமுகம் செய்யும் பாங்கும் தொகுப்பும் முடிப்பும் கேட்போரை வியக்கச் செய்யவல்லன.

ஆன்ம விஞ்ஞானி அடிகளாரும் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரும் தமிழகத்தின் விழிப்புணர்வுக்கு அடிகோலியவர்கள். பெரியாரைப் பற்றி அடிகளார் மனம் திறந்து உளம் மகிழப் பின்வருமாறு பாராட்டுவார்.

வள்ளுவன் வகுத்துத் தந்த குடிசெயல்
வகையினைப் போற்றும் தகைசால் பெரியார்
மாற்றா ருக்கிடி! மருள்நெறி யினர்க்கு
மருந்து! தமிழினப் பகைக்கு மாருதம்!
தமிழினத் தந்தை! தழுவிப் பழகிடும்
இனியபண் பாடு! குனியும் தமிழனைத்
தலைநிமி ரச்செய் திடுமுதுகெலும்பு!
இழிதகை நீக்கி ஏற்றம் தரும்ஒர்
இணையிலா வீரர் கனைமொழிப் பெரியார்
வாழும் தலைமுறை தமிழகத் தின்பொற்
காலத் தலைமுறை!

என்று பெரியாரை இன்றைய சமுதாயத்தின் ஏந்தலாகக் கண்டவர் அடிகளார்.

பழந்தமிழ் வழிபாட்டு நெறிகளையும் போற்றியவர் அடிகளார். பொங்கல் கவி அரங்குகளில் தமிழர்தம் பண்பாட்டு வளர்ச்சியினை எடுத்துக்கூறித் தொன்மைக்கும் அண்மைக்கும் பாலமாக விளங்கினார். தந்தை பெரியாரைப் போற்றியது போலவே அறிஞர் அண்ணாவைப் பலபடப் பாராட்டிப் போற்றியவர். அண்ணா அவர்களை நினையுந் தோறும் நெஞ்சுருகப் போற்றுவார் அடிகளார். 'இன்றும் இடருற்று அழும்போதெல்லாம் அண்ணா இல்லையே என்னும் ஓர் ஏக்கம் இதயத்தினையே அழுத்துகின்றது' என்பார். 'அந்த அழுத்தமே அண்ணா புகழுக்கு அடையாளம்' என்பார். அரசியல் பகைகளைக் களைந்து பண்பையே கண்டு இவரே தலைவர் என மிக ஏற்றம் பெற்றவர் அண்ணா என்பார்.

பாவேந்தரைப் 'பாரதி கவிஞரின் கவிக்கு ஒரு மிடுக்கினைக் கொடுத்துப் புதுயுகப் புரட்சியைக் கண்ட புதுவையின் மைந்தன்' என்பார். 'பகுத்தறிவுச் சுடர் வீசிய தீக்கனல்; போர் முரசு ஆற்றிய வீரக்கவிக் கனல்' என்பார்.

சமுதாயத் தலைவரைப் போற்றிப் புகழ்ந்த அடிகளார் சமயத் தலைவர்களையும் மிகுந்த நேயங்கொண்டு போற்றிய பெருந்தகை. தவத்திருசாந்தலிங்க அடிகளாரை 'நன்மை பெருகு அருள்நெறி நயந்தினிது.வளரத் தமிழ் உரை நிகழ்த்தும் தமிழ் அடிகள்' என்பார். 'தம்