பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

167


5. பெறற்கரும் அறிவு

மன்னா உலகில் மன்னுதல் வேண்டின்
மன்பதை உலகம் செல்லுமா றறிந்து
இந்தவை யகத்தின் இயங்குவர லாற்றை
நாளும்உய்த் தறிந்து மானுடப் போக்குடன்
முரண்பட்டு நில்லாது உடன்பாட்டு நிலையில்
ஏற்புழி ஏற்று ஏலா தனதிசை
மாற்றங்கள் செய்து தாமும்இம் மன்பதை
உலகமும் வாழ்வதற் குரிய அறிவினைப்
பெறுதல் வேண்டும்!
உலகத்தோ டொட்ட ஒழுகல் என்பது
வள்ளுவன் தந்த மறைமொழி யாகும்!
உலகம் என்பது உயர்ந்தோர்மாட் டென்பது
பொருள்பொதி உரையெனப் புந்தியில் தேறுக!
உலகம்! ஆம்!அது மானுடப் பரப்பே!
உலகம் ஏற்ப இயைபுழி ஒழுகி
வைய கத்தினை வாழ்வுறு வழியில்
இயக்கி வாழ்தலே வாழ்தல்! இத்தகு
அறிவே பெறற்கரும் அறிவென அறிகவே!