பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


18. அடக்கமுடைமை

அறம்சால் மூத்தோர் அருளிய முதுமொழி
அடக்க முடையோ ராதலே உயர்தனி
அறமென மொழியும்! அடக்கக் குணத்தினை
அடிமைத் தனமெனக் கருதுதல் வேண்டா:
அடக்க மெனும்போற் றரும்பெரும் அணி, பயம்
என்னும் தீமையில் தோன்றிய தன்று
அடக்கம் பெருமிதத் தின்விளை வாகும்.
அடக்கம் அஞ்சா மையின்விளை வாகும்
அடக்கம் தெளிவில் பிறந்த துணிவாம்
அடக்க முடைய ராதல் அமரரின்
விழுமிய நிலையைத் தருவது ஆகும்
நனிசுவை கருதிப் பெருந்தீனி தின்னாது
அளவறிந் துண்ணின் உடலில்நோய் ஏது?
அளவறிந் துண்போர் நலமிகப் பொருந்தி
இன்புறல் திண்ணம் இஃதறி வீரே!
நுணங்கிய கேள்விய ராக விளங்கி
நாவடக் கத்தை நாடொறும் பேணுவோர்
பெருந்துய ரெய்தி வருந்துத லிலரே!
புலன்களின் அடக்கம் அந்தண்மை நல்கும்;
புலன்களின் அடக்கமே புலனழுக் ககற்றும்;
பொறிகளின் அடக்கத் திற்கிணை ஏது?
அடங்குக! அடலே றெனவிளங் கிடுக!
அடக்க முடைமை யெனும்அணிக் கீடு
இப்புவி யினிலே எதுவுமே இல்லை.
அடக்க முடையவ ராகி
உலகை அடக்கி உயர்ந்துவாழ் வீரே!