பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

199


34. மானுடச் சிறப்பு

யாவையும் தந்து தண்ணளியுடன் காக்கும்
திண்மையுடைய நிலம், உழுதலால் - வெட்டுதலால்,
ஏற்படும் துன்புறுத்தலைத்
தாங்கியே காயும் கனியும் நல்கிடும் பெருமையைப்
பொறை என்றது குறள்!
இந்த உலகின் நியதியில் துன்பமும் ஒரு பகுதி.
யாவரும் இத்துன்ப நியதியின் வழிப்பட்டேயாதல்
வேண்டும்
துன்புறுவோரின் அனுபவமும் அதன் எதிர்விளைவும் ஒரு
படித்தன்று
சிலர், துன்பத்தினை ஏற்று உழப்பெறும் நிலம்போல
புடத்தில் வைத்த பொன்போல ஊனும் உயிரும் உணர்வும் பக்குவமடையப் பெறுவர்;
சிலர், வன்கணாளர் ஆவர்.
செடியில் பூத்துக் குலுங்கும் மலர்க்கு, சிறுபனித் துளிகள்
அழகூட்டும்
அதுபோல,
உருத்து வந்துரட்டும் துன்பமும் வாழ்க்கைக்குப் பொலிவூட்டும்.
துன்புறுதல் இரக்கத்தைப் பெற்றுத்தரும்;
நன்றிப்பெருக்கினைத் தரும்
உண்மை உலகில் ஈர்த்து நிறுத்தும்.
நல்ல மனிதனுக்கு வருந்துதல் தேவை!
வருந்துதலின் வழியன்றி வலிமைக்கு ஏது வாயில்?
ஆதலின், வருந்துதலும் நனி சிறப்புடைய மகிழ்வே!
துக்கமும் நல்லன படைத்திடும் வளமார் வாயிலே!
துக்கம் - துயரம் கண்டு வருந்துவானேன்?
வாழ்வை இயக்கி இன்புறு நலன்களாக
மடைமாற்றம் செய்வதே மானுடச்சிறப்பு!