பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


44. புன்னகை முகம்!

இயற்கையின் சிரிப்பை மலர்களில் அனுபவிக்கிறோம்!
மனிதர்களின் புன்சிரிப்பை முகத்தில் அனுபவிக்கிறோம்!
மனிதனைக் காட்டும் கண்ணாடி, - முகமே!
காலையில் முகத்தில் காணும் பொலிவு
மகிழ்வுகளில் தலையாயது!
நீ, தொடர்ந்து காண இயலாது!
மற்றவர் கண்டு இன்புறுவர்:
பகைவரையும் மாற்றும் நகைமுகம் எங்கே?
நீ, உன் பகைவரினும் மூளைபலம் பெற்றிருக்கலாம்!
ஆயினும் என்?
உன் பகைவன் புன்முறுவல் பூத்து
நீ, சிடுசிடுத்த முகத்தைக் காட்டினால்
உன் பகைவனுக்குக் கதவுகள் திறந்திருக்கும்!
உனக்கோ கதவுகள் முடியிருக்கும்!
சிரிப்பு, இயற்கையான பொழுதுபோக்கு!
சிரிப்பு - தருபவருக்கும் காண்பவருக்கும்
மகிழ்ச்சி நிறைந்த ஒய்வு!
நல்லவண்ணம் நகைமுகம் காட்டி வாழ்பவன்
நண்பர்களை ஆக்கிக் கொள்வான்!
இன்புறு நலன்களுடன் நனிசிறந்து வாழ்வான்!
பலருக்கும் காப்பும் மகிழ்வுமளிப்பான்!
புன்முறுவல் பூத்தமுகம்
இப்புவியில் செய்யாதது எது?