பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


48. வாழும் நெறி

வரலாறு கற்றுத் தரும் பாடம் ஒன்றுண்டு.
அளவில் கூடிய தீமையுடன் கூடிக் குலவினால்
குறைவான தீமையே புலப்படுகிறது.
என்னெனில் மனத்தின் மாயை?
பலரும் ஏற்றதால் சில தீமைகள் தேசிய மயமாயிற்று!
அதனால்-தீமையும் இல்லை என்ற கருத்து உருவாகியதால்
மரியாதையும் தோன்றலாயிற்று
இன்றைய கையூட்டினைப் போல!
அசுத்தம் - அழகு, நன்மை - தீமை ஆகியவை
பழக்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன
நாம் தீமையை என்று மாற்றினோம்!
சிலபடிகள் இறக்கி வைத்திருப்போம் - அவ்வளவுதான்!
நமது சுற்றுச் சூழல், நாம் ஏற்றொழுகிய தீமையையே
ஏற்று நடக்குமாறு செய்திடும் ஆற்றல் வாய்ந்தது
முடிவாக நடப்பதென்ன?
எந்தத் தீமையை வெறுத்து ஒதுக்கினோமோ
அதே தீமையை ஏற்று நடக்கும் நிலைமைக்கு
வந்திடுவோம்!
நாம் அத்தீமையை எடுத்துக் கொள்வதில்
புதுமைப் பொலிவையுண்டாக்கிச் சமரசம் காண்கிறோம்!
ஆயினும்,
மரணப்படியில் காலூன்றி விட்டோம் என்பது நினைக.
தீமையுடன் கூட்டு; தீமையை மன்னித்துத் தீமையைத்
தழுவி வாழ்தல்
தீமையைச் சார்ந்து
அப்பழக்கமே பழக்கமாகக் கொண்டு வாழ்தல்
இயற்கையாகி விடும்.
ஆதலால்,
தீயனவற்றை வெறுத்து ஒதுக்குக:
நல்லனவற்றை விடாது சிக்கெனப் பற்றிடுக
இதுவே வாழும் நெறி.