பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


52. தாமதம்!

ஒத்திப்போடும் கலையால் விளைவது தாமதம்!
தாமதத்தால் விளைந்தது என்ன?
உணர்ந்தது உண்டா?
தாமதத்தின் விளைவால் இழந்த இழப்புக்களை
எண்ணிப்பார்த்தது உண்டா?
தாமதம் தங்கியுள்ள இடத்தில்
எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்பதை
ஒர்ந்து உணர்ந்தது உண்டா?
ஏன்?
தாமதத்தில் காலநியதிகளே இல்லை!
சென்ற காலமும் இல்லை; நிகழ்காலமும் இல்லை!
எண்ணுக! எண்ணித் தெளிக!
இன்று, வார்ப்புத் தங்கமென வாய்த்தநாள்
நாளையோ - வாய்த்தால் வெள்ளி
நாளை மறுநாள் பாசம் பிடித்துப்
பல்லிளிக்கும் பித்தளை!
அதற் கப்பால் இயலாமைதான்! இயலாமையேதான்!
இன்று நேற்றாக மாற நெடிது நாழிகையாகாது!
இன்று மனிதன் நிற்கும் களிமண்
தூசியாகிப் புழுதியாவது இயற்கை!
தேறுக! தெளிக!
எதையும் ஒத்திப் போடாதீர்!