பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

233


67. இயங்கலே வாழ்க்கை!

"ஞாயிறு திரிதரு ஞாலந் தன்னில்
வெற்றி பொருந்திய வாழ்வு வேண்டின்
செயலே தேவை! செயலுறு மனிதனே
வெற்றி பெறுவான்!
முதலில் நீ எழு! தொடங்கு செயவினை!
நற்செயல் தொடக்கமே பாதி வெற்றியெனச்
சான்றோர் கூறினர்!
மூலையில் இருந்து உறங்கும் மனிதனைவிட
நடக்கும் மனிதனுக்கு ஆற்றல் அதிகம்!
உட்கார்ந்தே பொழுதைக் கழிக்கும் மனிதன்
எழுந்து நிற்பானாகில் இருமடங்கு
ஆற்றலை அடைந்து மண்ணிற்குத் தந்து நிற்கிறான்!
நிற்கும் மனிதனைவிட
நடைபோடும் மனிதனின் நடையில்
எண்ணில் பலமடங்கு ஆற்றல் கூடுகிறது!
மனிதனின் ஆற்றல் நாற்றிசையும் பரவிப்
பாரினை இயக்கி வளர்க்கும்:
உட்கார்ந்தே வாழும் மனிதனின் ஆற்றல்
மிகமிகக் குறைவு!
எழுந்து நடந்தால் வாழ்க்கை தொடங்குகிறது
ஆற்றலும் இருமடங்கு கூடுகிறது!
நடந்து பணிகள் செய்வா னாயின்
அவன் ஆற்றல் பலமடங்கு வளர்கிறது!
மிக உயர்ந்த மனிதன்
பேச்சில் மிதமாக இருப்பான்!
ஆனால், ஆற்றலை விஞ்சிய செயல்புரிவான்!
பாங்குடன் பலபணி செய்தலே
பாரினில் வெற்றி பொருந்திய
வாழ்வுக்கு வழி.

கு・XIV・16・