பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


72. தேடல்!

அடிவானத்திற்கு அப்பால்
தங்கப் புதையல் பானை என்று
பலர் சொல்லக் கேள்வி!
இதை யார் எடுக்க இயலும்?
சிலர் முயன்றால் சாதிக்கலாம்!
கால் கடுக்க, பல நூறு காதங்கள் நடந்து
தோண்டும் முயற்சி தொடக்கம்!
மீண்டும் மீண்டும் தோண்டுதல்!
ஆயினும், தங்கக்குடம் தென்படவில்லை!
மனிதனின் தாகம் வளருகிறது!
தாகம் வளர்ந்ததால் முயற்சி தொடருகிறது!
அடிவானத்தைத் தொடும் முயற்சியிலேயே
எல்லையற்ற மகிழ்ச்சி!
தங்கம் வேண்டுமா, தொடங்குக முயற்சியை!
தங்கம் கிடைக்காமல் போனாலும் நீ தங்கமாவாய்!
வாழ்க்கையின் சிறந்த பயன்,
தேடுவோருக்கேயாம்!
வாழ்க்கை யென்பதற்கே பொருள்
தேடல்! தேடல்! தேடல்!