பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

255


87. நீரில்லா ஆறு!

நண்பனே!
தென்பெண்ணை ஆறு பார்த்திருக்கிறாயா?
ஆறு என்று பெயர் தண்ணிர் இல்லை!
"நதியின் பிழையன்று; நறும்புனலின்மை"
என்றான் மானுடன் கம்பன்!
அதுபோல் வாழ்க்கையில்
இன்பமும் உண்டு துன்பமும் உண்டு!
நன்றும் உண்டு பிழையும் உண்டு!
ஏமாற்றங்களைக் கண்டு கசப்புணர்வு அடையாதே!
நல்ல வண்ணம் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்!
நம்பிக்கையுடன் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்!
ஏமாற்றங்களிலும் சில தவிர்க்க இயலாதவை!
சூழ்ந்துவரும் கருமேகம் முழுதும்
நீர்த்துளிகளா என்ன?
ஈரப்பதமே இல்லாத மேகங்களும் உண்டு!
தண்ணிர் இல்லாத ஆறுகள் உண்டு!
உண்மைக்கு மாறான நம்பிக்கைகளும் உண்டு!
எந்தச் சூழ்நிலையிலும் களத்தினின்றும் அகலாதே!
எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாதே!
நம்பிக்கைக்குரிய காரணங்கள் இருக்கின்றன!
நாள்தோறும் கதிரவன் படுதலும் எழுதலும்
காண்கின்றனம்!
ஆதலால், நீ ஏமாற்றங்களிலிருந்து மீளமுடியும்
நம்புக! நம்பிக்கை உடையோர் கெட்டதில்லை!
வெற்றிக்கு உகந்த நிலையில்
உன் திட்டங்களை மாற்றுக!
போராடு ! வெற்றி உறுதி!