பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


88. முதலீடு!

ஞாயிறு திரிதரு உலகினில்
எண்ணற்ற உயிர்கள்...!
நாம் எதனை விரும்புகின்றோம்?
பிணம் தின்னிக் கழுகுக்கு
அழுகிக் கிடக்கும் இறைச்சியிலேயே நாட்டம்!
உயர் ஒழுங்கு சார்ந்த வாழ்க்கைக்குச்
சான்றாக விளங்கும் தேனிக்கு நாட்டம்,
தேன் சொட்டும் மணமலர்களிலேயே!
நாம் எதை விரும்புவது?
கழுகையா? தேனியையா?
நாம் எதைத் தேடுகிறோமோ அது நம்மைத் தேடும்!
நன்மையை நன்னெஞ்சுடன் ஏற்காமல்
அஞ்சிப் பாதுகாப்பு நாடி ஒடினால்
பாதுகாப்பும் பயனற்றுப் போகும்!
சிலர், நன்மையே அடைகின்றனர்
ஏன்?
முன் அவர்செய்த நன்மை முதலீடாகிப்
பயன் திரும்புகிறது! அவ்வளவுதான்!
நன்மை செய்க! நன்மையின் பயன்
இன்றோ நாளையோ வந்துசேரும்!
நலம் பலபெற எண்ணாதே!
எழு! விழிப்புநிலை அடைக!
சுறுசுறுப்பாக நன்மை செய்ய முயலுக!
அந்த நன்மையே உனக்குத் திரும்ப வரும்!
அருமந்தப் பொறுப்பை ஏற்கும்
நன்மையே சிறந்த முதலீடு!
அதனிற் சிறந்த முதலீடு
எதுவும் இவ்வுலகில் இல்லை!