பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

259


90. அகக் கோலம்!

புரவலன் போலும் தோற்றம்!
தோற்றத்தினால் ஆவது என்?
தோற்றமே ஏமாற்றும் சாதனமாகலாம்!
பசிய புல்தரை
புதை குழிகளை மூடிக்கொண்டு இருப்பதைப் போன்றது!
நல்ல பசுமைத் தோற்றத்துடன்
கொப்பு, கிளைகளுடன் விளங்கும் மரத்தில்
எந்த நொடியிலும் விழுவதற்குரிய
அழுகிய பகுதியும் உள்ளே உண்டு!
இனிய பழக்கங்கள் தோலுக்குரிய பூச்சைப் போன்றது!
தோலைக் கிழித்துப் பார்த்தால்
மனத்தைக் குமட்டும் கசப்புணர்வைக் காணலாம்!
பரந்தமுகம்! பரந்த இதயத்திற்குச் சான்று அல்ல!
சுத்தமான உடம்பு, சுத்தமான வாழ்க்கையைக் காட்டாது
பிரார்த்தனைகளை முணுமுணுக்கும் வாய்
பிரார்த்தனை செய்யும் இதயமும்
பெற்றிருக்கும் என்பதற்கு ஏது உறுதி?
ஆடைகள் அமைச்சரை உருவாக்குவதில்லை;
ஆடைகள் பார்வைக்கு நன்றாக இருக்கலாம்!
ஆனால்,
ஆடைகள் மனிதனை உருவாக்குவதில்லை!
வாழ்க்கைக்கு அழகு தேவை!
எந்த அழகு தேவை?
புறஞ்சுவர் கோலம் செய்யும் அழகன்று!
அகத்தைக் கோலம் செய்யும் அழகே, அழகு!