பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


96. நண்பன்

நண்பர்களை நண்பர்களாக நடத்துக!
நட்புக்குறுதியாக விளங்குக!
நட்பு வாழ்க்கையின் நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்க!
நட்பின் போக்கில் நெகிழ்ந்து கொடு!
நண்பருக்கு உண்மையாக இரு!
நட்டோருக்கு எப்போதும் தடையிலாத் தாழ்மைநலம்
பேணுக!
நட்டோர் மாட்டுப் பரிவும் உதவியும் காட்டுக!
எல்லாரும் கைவிட்ட நிலையிலும்
நீ உன் நண்பனிடம் இரு!
உன் நண்பனுக்கு உதவ முன் வருக!
உன் உதவிக் கரத்தை நீட்டுக!
நட்பைப் பெறவும் நட்பின் சிறப்பை
நாளும் பேணுதற்கும் உரிய நாழிகை இதுவே!
உறவின் வளர்ச்சிக்கு விரைந்து முந்து!
மனமுறிவுகளுக்குப் பின்தங்கு!
நண்பர்களுடன் நெருக்கமாகப் பழகுக!
ஆயினும் நண்பர்களுக்குச் சுதந்திரம் தருக!
கடின கட்டுப்பாடுகளை விதிக்காதே!
நண்பனும் மூச்சு விட வேண்டும்!
உண்மையான நட்பு நயம்பட விளங்கும்!
சுதந்திரமான மூச்சு கூட உண்மையான நட்புக்கு இல்லை!
நீ வேறு நண்பன் வேறல்ல!
இருவரும் ஒருவரே யானமையே நட்பு!