பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

283


112. தந்தையும் மகனும்!

இந்தியாவை ஆண்ட சக்கரவர்த்திகளில்
வரலாற்றுப் புகழ்பெற்றவர் பாபர்!
தன் அருமைப் புதல்வன் ஹுமாயூனுக்குத்
தன் உயிரை ஈந்து காக்க முன் வந்த உணர்வு,
உணர்வுக்கு ஒர் எடுத்துக்காட்டு!
தந்தையர் தன்னுயிர் ஈந்தும்
தனயர்களைக் காப்பாற்றும் தியாகம் செய்தனர்!
தனயர்களை நினைந்து நினைந்து குரல் கொடுத்த
தந்தையர்கள் எண்ணிக்கையில் பலர்!
தாய் பிரசவ வேதனையில் கிடந்துழன்ற போது
மருத்துவமனையின் தாழ்வாரத்தில்
தந்தை தவித்துப் புலம்பி நின்ற காட்சி!
மதலை ஒன்று மரணத்தின் நிழலில் வீழ்ந்தது.
அது தொடங்கி நடந்த வாழ்க்கைப் பயணம்
சூழ்கவியாகவே அமைந்தது.
வாழ்க்கை வழித்தடத்தில் தனயர்கள் நலங்காத்துப்
பயணம் செய்த தந்தையின் நிகரில் இதயத்துக்கு
ஓராயிரம் இதயங்கள்
நிகரென்று கொட்டு முரசே!
தந்தையின் துயரமே தனயனின் ஆக்கம்
இதுவே உலகத்தின் நியதி!