பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

305



131. தந்தைக்குத் தந்தை

நீ, ஒரு தந்தை!
ஆதலால் பள்ளியுமாவாய்!
தந்தையாதலும் கல்வியின் பாற்பட்டதே!
தனயனைப் படிப்பித்து வளர்த்து
தனயன் இதயத்தில் தந்தை இடம்பிடித்தல் வேண்டும்!
நற்றிருமகள் ஒருத்திக்குத் தந்தையாகி
அணைத்து வளர்த்து இதயந்தழுவி நிற்கும் இன்பம்!
கவனமாகப்பார்: தொடர் கண்காணிப்புச் செலுத்துக!
வளர்ப்பில் விழிப்புணர்வு கொள்க!
தூங்கற்க!
தூங்கி, ஒரு எதிர்கால வரலாற்றைப் பாழாக்காதே!
தந்தையின் மந்திரமிக்க சொல்லும்
தந்தையின் வாழ்நிலை முன் உதாரணமாகவும்
பயமற்ற தைரியமும்
இளைய தலைமுறையின் மீதுள்ள பிடிப்பும்
குழந்தைகளுக்குக் கல்வியாக அமையும்
தந்தை குழந்தைகளுக்குக் கற்பிக்கட்டும்
குழந்தைக்கு மட்டுமா? தந்தைக்கும் கல்வி தேவை
ஏன்?
குழந்தையைப் போலத் தந்தைக்கு
யார்தான் பாடம் சொல்ல முடியும்?
திரு ஏரகத்து அமர்ந்தருள் செய் சுவாமிநாதன்
தந்தையாம் சிவத்துக்கு ஒதியதுணர்க!