பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



140. இடர்ப்பாடுகள்!

வாழ்க்கையில் எதுவும் கடினம் இல்லை!
எந்த இடர்ப்பாட்டையும் நாம் சந்திக்கும் வகையில்
எளிதாக்க முடியும்!
இடர்ப்பாடுகள் ஒழுக்க நெறிகளைப் பயிற்றுவிக்கும்;
இடர்ப்பாடுகளைக் கடக்கும் பொழுதெல்லாம்
வலிமை பெற்று வளர்கின்றோம்!
இடர்ப்பாடுகள் நமது வலிமையைக் கூட்டுகின்றன!
இடர்களும் தடைகளும் நமக்கு வாய்த்த தேர்வுகள்!
இவைதாம்
நமது முடிவுகளின் உண்மை நோக்கங்களைத் தேடி
முடிவு செய்கின்றன!
சுடு சூரியன் மரத்தின் வேர்களுக்குப் பயிற்சியளிக்கிறது!
சுழன்றடிக்கும் புயல்
மரக்கிளைகளின் வலிமைக்குச் சான்றளிக்கின்றன!
அதுபோலத்தான் மனிதனும்!
மனிதன் மலையுச்சியில் நிற்கும் பொழுது
அவனுடைய நம்பிக்கைகளும் சீலமும்
சோதனைக்குள்ளாகும்; வளரும்!
இடர்ப்பாடுகள் எழுச்சிக்கு வித்தாகும்!
இடர்ப்பாடுகள் உறுதி இழக்கச் செய்வன அல்ல!
மனித இயல்பு இடர்ப்பாடுகளுக்கிடையில்
வளர்வதேயாம்!
இடர்ப்பாடுகளை எண்ணற்க! எழுக!