பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



142. முழுமை!


பிழைத்தல் ஒரு பொருள் அல்ல!
மனிதன் முழுமையாகப் பயன்படுகின்றானா?
இதுவே கேள்வி!
அடுக்களையில் சமையல் தொழில் செய்வோர்
தேங்காய் துருவினால் முழுமையாகத் துருவுவர்.
எலுமிச்சம்பழம் பிழிந்தால் முழுமையாகப் பிழிவர்.
அதுபோல
மனிதனின் முழுத்திறமும் பயன்படுகிறதா?
ஆழமான உண்மைகளைக் காண, புத்தி பயன்படுகிறதா?
கற்பனைத்திறன் எதிர்வரும் காலம் கணித்தறியப்
பயன்படுகிறதா?
இதயம், நீண்ட துடிப்புக்குப் பயன்படுகிறதா?
கைகளின் விரைவு தொழிலில் காணப்படுகிறதா?
கால்கள் மரங்களில் விரைந்து ஏறுகின்றனவா?
செவிப்புலன் கேட்டறிதலில் ஈடுபடுகிறதா?
நா, நல்லன இனியன பேசுகிறதா?
அன்பு மொழி பேச, நா பழகி இருக்கிறதா?
உணர்வுகளால் அணைந்த நண்பர்கள் உள்ளனரா?
இதயம் தழுவியஅன்பில் திளைக்க நட்பு உண்டா?
கடவுளிடம் பேசி மகிழும் இதயம் இருக்கிறதா?
இவையெல்லாம் மானுடத்தின் அடைவுகள்!
இவையெல்லாம் இருந்தால் மனிதன்!
முழு மனிதன்!
நீ இப்படி இருக்கிறாயா?
நீ உன்னை முழுமையாகப் பயன்படுத்துகிறாயா?
எண்ணுக!
முழுமையாகப் பயன்படுக! முழுமையாக வாழ்க!
பூரணத்துவம் அடைவாய்!