பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

321



147. காலமும் கனவும்


நீ நாளும் நினைவாய் நன்னெஞ்சமே!
கழைக் கூத்தாடி குறிக்கோள் பற்றிக் கூறியதை
நீ நாளும் நினைவாய் நன்னெஞ்சமே!
“நான் சூரியனைக் குறிவைத்துச் சுட்டால்
ஒரு நட்சத்திரத்தைச் சுட்டு வீழ்த்துவேன்”
என்ற ஆப்த மொழியை நினைவிற் கொள்!
நீ எண்ணியதை எல்லாம் அடையமுடியாது.
ஆம்! உன் குறிக்கோள் அளவுக்கும்
ஆற்றலோடு செய்யும் முயற்சி அளவுக்கும் உயர்வாய்!
எத்துணையும் ஐயமில்லை!
இலக்கினை அடைதல் விபத்தன்று!
இலக்குகள் இல்லையேல் வெற்றியும் இல்லை!
கனவுகள் வென்றதில்லை!
கற்பனைகள் நடைப்பயணம் கற்றுத் தந்ததில்லை!
ஒவ்வொருவரும் வேணளவு வளரலாம்!
வளர்ச்சிக்குத் தேவை இரண்டு!
ஒன்று, கவனித்துப்பார்! நட!
இரண்டு, உயர் இலக்கினை எண்ணு!
அந்த இலக்கும் உண்மையொடு பொருந்தியதாக
இருக்கட்டும்!
நீ, நினைத்தவண்ணம் ஆவாய்!
நீ, உயர்வற உயர்ந்த குறிக்கோளையே உன்னுக!
அங்ங்னம் இல்லையெனில்
கடிகாரத்தின் அலாரம் சிலருக்கே உதவியாம்!
பலர் அதனால் பயனடைவதில்லை!
உயர்வாகத் தொடங்குக! காலம் கடந்தாலும்
பரவாயில்லை!
ஒரு நேரத்தில் கவனமாக வாழக் கற்றுக்கொள்!
தோல்விகள் பெரிதல்ல; குற்றமும் அல்ல!
ஆனால், உயர் குறிக்கோள் கொள்ளாது
தாழ்வான குறிக்கோளுடையராதல் குற்றம்!
குற்றம் தவிர்த்திடுக! உயர் குறிக்கோள் கொள்க!
காலத்தை வென்று வாழலாம்!